கலெக்டர்கள் கூட்டத்தில் ரம்மி விளையாடிய டிஆர்ஓ: சமூக வலைதளத்தில் வைரல்-விசாரணைக்கு உத்தரவு

1 hour ago 1

திருமலை: கலெக்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் டிஆர்ஓ, தனது செல்போனில் ஆன்லைனில் ரம்மி விளையாடினார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.சி. வகைப்பாடு குறித்த ஒரு உறுப்பினர் ஆணையத்தின் தலைவர் ராஜீவ்ரஞ்சன் மிஸ்ரா தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் ராஜீவ்ரஞ்சன்மிஸ்ரா, அனந்தபுரம் கலெக்டர் வினோத்குமார், சத்யசாய் மாவட்ட கலெக்டர் சேதன், எஸ்.பி. ஜெகதீஷ் மற்றும் உதவி ஆட்சியர் வினோத்னா பங்கேற்றனர். டி.ஆர்.ஓ. மலோலா வரவேற்றார்.

கூட்டத்தில் பல சங்கங்கள் ஒன்றிணைந்து எஸ்.சி. வகைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எதிராகவும் மனுக்களை சமர்ப்பித்து கொண்டிருந்தன. இதை கண்டுகொள்ளாமல் டி.ஆர்.ஓ. மலோலா. தனது செல்போனில் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் மும்முரமாக இருந்தார். அருகில் உயரதிகாரிகள் இருந்தபோதிலும், ரம்மி விளையாடுவதில் ஆர்வத்தை காண்பித்தார். இதை கூட்டத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வளைதளத்தில் வெளியிட்டார். இந்த காட்சி மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கூறுகையில், ‘டிஆர்ஓ மலோலா தனது அலுவலகத்தில் இருந்து கொண்டே பணியை கவனிக்காமல் ஆன்லைனிலேயே எப்போதும் கேம் விளையாடுவார்’ என்றனர். வருவாய் அதிகாரியாக மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டிய ஒருவர், ஒரு முக்கியமான பிரச்னை குறித்த கூட்டத்தின்போது இப்படி நடந்து கொண்டுள்ளார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் அனந்தபுரம் மாவட்ட கலெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்த இணை ஆட்சியருக்கு நேற்று உத்தரவிட்டார். இதுகுறித்து விளக்கம் கேட்டு டிஆர்ஓ மலோலாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இணை ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில் டிஆர்ஓ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வினோத்குமார் தெரிவித்தார்.

The post கலெக்டர்கள் கூட்டத்தில் ரம்மி விளையாடிய டிஆர்ஓ: சமூக வலைதளத்தில் வைரல்-விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article