அகமெனும் அட்சயபாத்திரம்

2 hours ago 1

நன்றி குங்குமம் டாக்டர்

சந்தேகமெனும் முள்விதை

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

சந்தேகங்களால்தான் இந்த உலகம் பல அறிவியல் முன்னேற்றங்களை நாளுக்கு நாள் கண்டுகொண்டிருக்கிறது. பூமி உண்மையிலேயே தட்டையானதுதானா? மனிதனால் பறக்கவே முடியாதா? இந்த நோய்க்கு மருந்தே கிடையாதா? இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட முடிவுகளின்மேல் ஐயமேற்பட்டு, அறிவின் துணையோடு புதிய உண்மைகளைக் காண முற்பட்டதே மனிதகுல வளர்ச்சியின் துவக்கம். பயனுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளை விஞ்ஞான உலகம் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. இதோ! புதிய ஆண்டு 2025 பிறந்திருக்கிறது. இதில் நல்ல மாற்றம் வருமா என்று யோசிப்போம். கேள்விகளும், தேடல்களுமே வாழ்க்கையை உயிர்ப்புள்ளதாக, சுவாரசியமானதாக மாற்றுகிறது.

ஆக, நல்ல விளைவுகளைத் தருமெனில் சந்தேகமும்கூட நல்லதுதான்.ஆனால், பொதுவான கருத்தியல்கள் அல்லாது நெருங்கிய உறவுகளின் உண்மைத்தன்மையில் சந்தேகம் வரும்போது மேலும் குழப்பங்களும்,பிரச்னைகளுமே ஏற்படக்கூடும். முதலில் சந்தேகம் என்பது தலைகீழாகப் பார்த்தல் (Inverted understaning ) மிகையாகும் கோளாறில் ஆரம்பிக்கிறது.ஜெர்மனியைச் சேர்ந்த கணிதவியலாளர் கார்ல் கஸ்டவ் ஜேக்கப் (Carl Gustav Jacob ) கணிதத்தில் இந்த தர்க்கத்தைப் பயன்படுத்தினார். ”எப்போதும் எல்லாவற்றையும் தலைகீழாகவும் பார் “என்பதே அவரின் கோட்பாடாக இருந்தது. உலகப் புகழ் பெற்ற வணிகவியலாளரும் பில்லினியருமான சார்லி மங்கர் (Charlie Munger ) இதே கோட்பாட்டினை ஆதரித்து ”தலைகீழாகப் பார்த்தல் மறைந்திருக்கும் பல உண்மைகளை வெளிக்கொணர உதவும்.அப்படிப் பார்க்காவிட்டால் பிரச்சனைகளைத் தீர்க்கவோ முன்னேறிச் செல்லவோ முடியாது” என்றார்.

இந்த பயனுள்ள நோக்கு தீவிரமாகும்போதுதான் சிக்கல்கள் எழுகின்றன. இயல்பாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இன்னொருவர் தவறாக நினைத்து விடுவாரோ என்று கூடுதலாக நினைத்து ஒருவர் ஒன்றை மறைக்க, ஏதோ ஒன்றை மறைக்கிறாரே அது தவறாக இருக்குமோ என்ற ஐயத்தில் மற்றொருவர் தவிக்க…இப்படி சிறிய விதையாக மனதில் விழும் சந்தேகம் நாளடைவில் வளர்ந்து உறவையே கிழித்துவிடும் முள்செடியாக மாறுகிறது.

சந்தேகம் என்ற ஒன்று தோன்றி விட்டால் அதற்குப் பிறகு இன்னொருவர் மௌனமாகச் சென்றாலும் தவறாகத் தெரியும், விளக்கம் கொடுத்தாலும் தவறாகவே தோன்றும்.சந்தேகம் எதிர்மறையான பல பின்விளைவுகளைக் கொண்டு வருகிறது. வேவு பார்த்தல், உறவை எடை போடுதல், பின்தொடர்தல், தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பரிசோதித்தல், ஒருவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுதல் இப்படி சந்தேகத்தின் வளர்ச்சி வேறு எதிலும் கவனம் செலுத்தவிடாமல் அழிவுப் பாதையிலே செல்லும்.

பல ஆண்டுகள் பழகிய நெருங்கிய உறவில் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுகிறார் என்ற நிலை ஆரம்பிக்கும் பொழுதே இன்னொருவருக்கு உள்ளுணர்வின் (Intution ) வழி அது தெரிந்துவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால், இதற்கு நிரூபணங்கள் கிடையாது. ‘Gut feeling’ என்போம். இப்படி நடக்கக்கூடுமென்ற உறுதியான தீர்க்கதரிசனமாகவும் அது இருக்கலாம். மனதில் விழுந்த சந்தேகத்தின் காரணமாக ஒருவரின் முகக்குறிப்புகளும், உடல் மொழியும், பயன்படுத்தும் வார்த்தைகளும், செயல்களும் வழக்கத்திற்கு மாறாக இருக்கும். அவை இன்னொருவருக்கு நீங்கள் அவரை சந்தேகப்படுகிறீர்கள் என்பதைக் காட்டிக் கொடுக்கும்.

உண்மையில் தவறு இழைக்காதவராக இருந்தால் உங்களின் இந்த சந்தேகம் அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும்.எந்த அடிப்படையுமின்றி சந்தேகப்படுகிறார்களே என்ற கோபம் எழலாம். இதன் காரணமாக அவர்களுடைய முகம் வாட்டமாகக் காணப்படும். முன்னிருப்பதைவிட மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொள்ளலாம்./ அல்லது என்னைப் போய் சந்தேகப்பட்டு விட்டாயே என்று உங்களிடமிருந்து சற்று விலகலாம். ஆசுவாசம் கொள்ள வேறு வேலைகளில் கவனம் செலுத்தலாம்.

ஆனால், அவர்களின் இந்த மாற்றங்களைப் பார்த்து நீங்களோ ”நான் நினைத்தது சரியாதான் போச்சு. குற்றவுணர்வு காரணமாக அவர்கள் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.எனவே அவர்கள் தவறுதான் செய்கிறார் ” என்று முடிவே கட்டி விடுவீர்கள். மேலும், உங்களின் நடத்தையிலும், சொற்களிலும் அது கோபமாக வெளிப்படும். சிறுசிறு வாக்குவாதங்கள் சண்டைகள் என ஆரம்பித்து சந்தேகத்தின் விதை வளர்ந்து உறவையே கேள்விக்குறியாக்கும். சந்தேகம் ஏற்படுவதற்கான முகாந்திரம் இருக்கும் நிலையில், இரு தரப்பும் அமர்ந்து உரிய நேரத்தில் பேசித் தீர்க்காவிடில் நிரந்தரப் பிரிவை நோக்கியே அந்த உறவு நகரும்.

தனித்துவமான இடைவெளிக்காக (Individual space ) அதிக சுதந்திரம் எடுத்துக் கொள்வது, ஸ்மார்ட் ஃபோன்களில் அதிக நேரம் செலவழிப்பது போன்றவற்றால் மனிதர்களுக்கான ‘குவாலிட்டி டைம்’ குறைந்துபோகிறது. ஒருவருக்கொருவர் நேரம் செலவிடுவதில் தவறும்போது உறவுகளில் விரிசல் ஏற்பட்டு சந்தேகம் முளைக்கிறது. அடுத்தவரை நோக்கி குறை சொல்ல விரல் நீட்டும் முன் இந்த உறவின் இணக்கத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று ஒருமுறை பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.

ஒரு உதாரணத்திற்கு, நம் வீட்டுக் குழந்தையை எடுத்துக் கொள்வோம்.அந்தக் குழந்தை பக்கத்து வீட்டில் சென்று எனக்குப் பசிக்கிறது என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறது என்று நாம் எப்போது எண்ணுவோம்? நம் வீட்டில் குழந்தைக்கு நேரத்திற்குப் போதிய அளவு உணவு கொடுக்காத போதுதான் அவ்வாறு தோன்றும் இல்லையா? போலவே, உறவுகளின் உறுதித்தன்மைக்கு தேவையான அன்பு, பாசம், மதிப்பு, நெருக்கம் (Intimacy) நம்பிக்கை, காதல், அக்கறை, முன்னேற்றத்திற்கான ஊக்கம் இவற்றை நாம் கொடுக்கிறோமோ? என்று கேட்டுக் கொள்ளலாம். ஒரு உறவைக் காப்பாற்ற இவ்வளவு கொடுக்க வேண்டுமா என சலிப்பு தோன்றுகிறது இல்லையா?

ஆனால், ஒரு விதை பயன்தர வளமான மண், நீர், சூரிய ஒளி, பாதுகாப்பு எல்லாமும்தான் தேவைப்படுகிறது இல்லையா? அப்படித்தான் இதுவும். ஏதேனும் ஒன்று இல்லாதபோதே அந்த இழப்பை ஈடு செய்ய நம்முடைய இணை வேறு ஒருவரிடம் பழகக்கூடும் என்று நமக்குத் தோன்றும். முழுமையான நல்லுறவுக்கான நமது பங்களிப்பைச் சரியாக செய்தால் எனக்குரியவர் என்னை விட்டுப் போக மாட்டார் என்ற நம்பிக்கை ஏற்படும்.

அதையும் தாண்டி நல்ல விதமாக நீங்கள் நடத்தியும் அவர்கள் வேறு எதையோ தேடிச் செல்கிறார்கள் எனில் உங்கள் இருவரின் எண்ண அலைகள், வாழ்க்கைத் தேடல்கள் பொருந்தவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உறவுகளில் கயிறு கட்டி இழுத்துப் பிடித்து மண்டியிட வைக்கும் முயற்சி ஒருபோதும் நிரந்தர மகிழ்ச்சியையும், நிறைவையும் தராது எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மனித மனமும் சிறு பாராட்டிற்காகவும், அங்கீகாரத்திற்காகவும்தான் ஏங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்வின் ஆகச் சிறந்த தருணம் எது என்று கேட்டால் எதைச் சொல்வீர்கள்? முதல் முதலில் சிறு வயதில் வாங்கிய பரிசு, முதற் காதலியின் முத்தம், பணியிடத்தில் வாங்கிய நற்சான்றிதழ், பொது வாழ்வில் அடைந்த மதிப்பு , எவரோ ஒருவர் கொடுத்த வாழ்த்து இப்படி நேர்மறையான உங்களின் திறன்களை, குணாதிசயங்களைக் கொண்டாடிய பொழுதுகளைத்தான் உன்னதப் பொழுதுகளாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.

அப்படியிருக்க, நெடுங்காலம் உங்களோடு பயணிக்க இருக்கும் துணைக்கு அதேபோன்ற நல்ல பாராட்டுதலை, அங்கீகாரத்தை வழங்காமல் இருக்க காரணம் என்ன? பரஸ்பர உற்சாகமூட்டல் குறைந்தால் சுயமரியாதை பாதிக்கப்பட்டு அதனை ஈடுசெய்ய மனம் வேறொரு உறவை நாடிப் போக வாய்ப்பு இருக்கிறது என்று உளவியல் குறிப்பிடுகிறது. இது எங்களுக்கே தெரியுமே என்போம். ஆனால், வார்த்தையில் இருக்கும் எதுவும் வாழ்க்கையில் வராமல் போவதே இங்கே பெரும் பிரச்னை.

சந்தேகம் கொண்டு தேடிக்கண்டுபிடித்துவிட்ட ஒரு பொய்யானது ஒருவர் இதுவரை கூறிய எல்லாவற்றையும் சந்தேகம் கொள்ள வைக்கும். ஒரு சந்தேகம் தொடர்பான நிகழ்வை எல்லா சம்பவங்களோடும் தொடர்புபடுத்திப் பார்ப்பதிலிருந்து நீங்கவே முடியாது. இதில் இதற்கு மேல் இறங்க வேண்டுமா என சுதாரித்து, மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளாவிடில் சந்தேகம் எனும் கொடிய பேய் உங்களையே விழுங்கிவிடும்.

எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது. வெளிப்படையாக எல்லாவற்றையும் பகிர வேண்டும் என்பதை எல்லா நேரங்களிலும் செயல்படுத்த இயலாது என்ற நடைமுறை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். தனிமனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். உங்களுக்கு தேவையானது என்றால் நிச்சயம் அந்தத் தகவல் உங்களிடம் வரும். உங்களுக்குத் தேவையில்லாதது என்றால் அது உங்களுக்கு எதற்கு? தேவையில்லாத தகவலின் சுமையை எதற்கு மனக்குப்பையாக நீங்கள் சுமக்க வேண்டும்? இவ்வாறான விலகல் மனநிலையோடு தள்ளி நின்று பார்ப்பது தீர்வுகளை இலகுவாக்கும். இல்லை வேண்டுமென்றே உங்களிடம் ஒருவர் ஒன்றை மறைக்கிறார் என்றால் அப்படிப்பட்டவரின் உறவு உங்களுக்கு எதற்கு ? சந்தேகப்பட்டு கேள்வி கேட்காமல்
புரிந்து கொண்டால் இருவருக்குமான நட்பாவது மிஞ்சும். மனம் நோகும்படியான பெரும் சண்டைகளை உருவாக்கி, நிரந்தரமாக காயங்களை ஏற்படுத்திக் கொள்ளும் சந்தேகத்தை ஏன் கைக்கொள்ள வேண்டும்? என்று சிந்திக்கலாம்.

இந்த உலகில் யாருமே 100 சதவீதம் சிறந்தவரல்ல என்றிருக்க இன்னொருவர் சரியாகத்தான் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சிக் கேள்வியை வளர விடுவது ஆரோக்கியமான மனப்போக்கு இல்லை. குறைகளோடும் அவரவரின் இயல்புகளோடு உறவை ஏற்கப் பழகிக் கொண்டாலே சந்தேகம் குறைந்துவிடும். ஓர் உறவு நீடித்து இருக்க தனக்கு இவையெல்லாம் கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு நான் இவரை விரும்புகிறேன் இவர் இவருக்கு இவற்றையெல்லாம் கொடுக்க விரும்புகிறேன். அவரின் மகிழ்ச்சி எனக்கு முக்கியம் என்று கொடுக்க முன்வருதலே உறவை சீராக்கும்.

இவர் எனக்கே உரியவர் என்ற உடைமைத்தன்மையும் (Possesiveness) சந்தேகநோயைக் கொண்டுவரும். எப்போதும் என்னுடனே இருந்து என்னை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கவன ஈர்ப்புக் கோளாறு (Attention Seeking Disorder ) இன்னொருவரைக் கட்டுப்படுத்தி அடிமையாக வைத்துக் கொள்வதில் கிடைக்கும் சுயதிருப்தி (Self Ego ), பாதுகாப்பற்ற மனநிலை (Insecured mindset ), சுயமதிப்பு குறைபாடு (Self-Esteem issues ), அதீத அன்பு போன்ற காரணங்களும் சந்தேகத்தின் முதன்மைக் காரணிகளாக இருக்கின்றன.

உளவியலில் அதீத சந்தேகம் – Paranoid எனும் கொடிய மனநோயின் ஆரம்பக்கட்ட நிலையென்று எச்சரிக்கிறது. இந்நோயானது சித்தப்பிரமை, அவநம்பிக்கை மனநிலை, ஐயப்பித்து என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மாறுபட்ட நடத்தை, அவநம்பிக்கை, தொடர் சந்தேகங்கள், சமூகத்திலிருந்து விலகுதல் என இதன் தன்மைகள் சொல்லப்படுகின்றன. இங்கே எதுவும் சரியில்லை எனும் விரக்தி மனநிலை அல்லது ஏதேனும் ஒன்றின் மேல் அதீதப்பிடிப்பு என்று ஆபத்தான நிலைகளை நோக்கி இது நம்மைச் செலுத்தும்.

சந்தேகமனநிலையாளர் தன்னைக் குற்றமற்றவராகவே எப்பொழுதும் கருதுவார். மற்றவர்கள் தன்னை வருத்துவதற்காக ஏதேனும் செய்வார்கள். யாருமே எனக்கு துணையில்லை என பிறர்மீது பயம் கொண்டிருப்பார்கள். அவரால் வரக்கூடிய ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற தற்காப்பு (Defence ) உணர்வுடனே இருப்பார்கள். அதனை விழிப்புணர்வு என்று அவர் கருதிக் கொள்வார்.

சம்பந்தபட்டவர்களுக்கு இதன் தீவிர தாக்கம் பற்றி தெரியாமல் போவதால்தான் பண்டைய காலத்திலிருந்து ‘ சந்தேகப் பேய் ‘என்று கூறி எச்சரித்து வருகிறார்கள். தன் சந்தேகத்திற்கான விடைகளை தேடும் எண்ணம், மனதை ஆக்கிரமித்து விடும். அதன் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க மனமானது, அடுத்தவரை நோக்கியே மேலும் மேலும் குற்றம் சாட்டும். இருவரில் ஒருவர் ஆபத்தைப் புரிந்து கொள்ளாத பொழுது அது வளர்ந்து மோசமான நிலைக்கு தள்ளக்கூடும்.

The post அகமெனும் அட்சயபாத்திரம் appeared first on Dinakaran.

Read Entire Article