கலெக்டரின் உறவினர் என கூறி தஞ்சை ஆடிட்டரிடம் ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது

6 days ago 4

தஞ்சை: கலெக்டரின் உறவினர் எனக்கூறி தஞ்சை ஆடிட்டரிடம் ரூ.1 கோடி பறித்த அரியலூரை சேர்ந்த இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா குலசேகரநல்லூரில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக ரூ.465 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி தொடர்புடைய நில உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது. அதன்படி கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆடிட்டரான ரவிச்சந்திரன்(68) என்பவரின் 80 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் வளர்த்து வந்தார். நிலம் கையகப்படுத்தப்பட்டதால் தேக்கு மரங்களை என்ன செய்வது என்று ரவிச்சந்திரனுக்கு தெரியவில்லை.

இந்நிலையில் கன்னியாகுமரியில் ஏழைகளுக்கு தனது சொந்த பணத்தில் வீடு கட்டி கொடுத்தபோது அங்கு இன்ஸ்ெபக்டராக பணியாற்றிய அரியலூர் மாவட்டம் திருமாந்துறையை சேர்ந்த நெப்போலியன்(45), ரவிச்சந்திரனுக்கு பழக்கமானார். இதனால் தனது நிலத்தில் வளர்த்து வரும் தேக்கு மரங்களை என்ன செய்வது என்று நெப்போலியனை தொடர்பு கொண்டு ரவிச்சந்திரன் ஆலோசனை கேட்டார். அதற்கு நிலத்தில் உள்ள மரங்களை வெட்டி விற்று விடுமாறு நெப்போலியன் கூறினார். அதன்படியே ரவிசந்திரனும் செய்தார். இதனிடையே கும்பகோணத்தை சேர்ந்த வருவாய்த்துறையினரை தொடர்பு கொண்டு ஆடிட்டர் ரவிச்சந்திரன் தனது நிலத்தில் வளர்த்து வந்த தேக்கு மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டி விற்பதாக நெப்போலியன் போட்டுக்கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

அதன்பேரில் 2020ம் ஆண்டு ரவிச்சந்திரன் தனது நிலத்தில் வளர்ந்திருந்த 30 தேக்கு மரங்களை வெட்டி வாகனத்தில் ஏற்றியபோது வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று 3 டன் எடையிலான 207 தேக்கு மரக்கட்டைகளை பறிமுதல் செய்து கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்ததுடன் பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதனால் நெப்போலியனை, ரவிச்சந்திரன் தொடர்பு கொண்டு என் மீது வழக்கு தொடுக்காமல் இருக்க என்ன செய்வதென்று கேட்டார். அதற்கு நான் கலெக்டர் ஒருவரின் உறவினர், உங்களது மீது வழக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க சிபாரிசு செய்கிறேன். அதற்கு ரூ.1 கோடி தர வேண்டுமென நெப்போலியன் கூறினார். அதன்பேரில் ரூ.1 கோடியை நெப்போலியனிடம் ரவிச்சந்திரன் வாங்கினார். இருப்பினும் கூடுதல் பணம் கேட்டு ரவிச்சந்திரனை நெப்போலியன் மிரட்டி வந்தார்.

இதுகுறித்து தஞ்ைச எஸ்பி அலுவலகத்தில் ரவிச்சந்திரன் புகார் செய்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி ராஜாராம் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரதிமதி வழக்குப்பதிந்து தற்போது தருமபுரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் நெப்போலியனை நேற்று கைது செய்து தஞ்சை எஸ்பி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடி பறிமுதல்
நெப்போலியன் கடந்த ஒரு ஆண்டாக தர்மபுரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். தர்மபுரி தென்றல் நகரில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். லஞ்ச புகாரின் பேரில் நெப்போலியன் வீட்டில் நேற்று தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் குழுவினர் சோதனை நடத்தினர். வீட்டில் உள்ள அறைகளில் தீவிரமாக சோதனை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரூ.1கோடி பணம் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

The post கலெக்டரின் உறவினர் என கூறி தஞ்சை ஆடிட்டரிடம் ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article