கலசப்பாக்கம், ஜன. 22: கலசப்பாக்கம் அருகே நெசவாளர்கள் மயிலார் பண்டிகையை இன்று உற்சாகமாக கொண்டாடினர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 14ம்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதைதொடர்ந்து மாட்டுபொங்கலும், காணும்பொங்கலும் களைக்கட்டியது. விவசாயிகள், உழைப்பாளிகள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். இதையடுத்து பொங்கல் முடிந்த 8ம் நாள் மயிலார் பண்டிகை கொண்டாடப்படும். அப்போது நெசவாளர்கள், விவசாயிகள் உள்பட உழைக்கும் தொழிலாளர்கள் மயிலார் பண்டிகையை கொண்டாடி தங்களது தொழில் சிறந்து விளங்கவும், வாழ்வாதாரம் உயரவும் வேண்டியும் முருகப்பெருமானை வழிபட்டு மீண்டும் தங்களது தொழிலுக்கு திரும்புவது வழக்கம். அதன்படி மயிலார் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், பழங்கோயில், மேலாரணி, மேல்வில்வராயநல்லூர், சிங்காரவாடி, காந்தபாளையம், கடலாடி உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள நெசவு தொழிலாளர்கள் மயிலார் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். இதையொட்டி அதிகாலை வீட்டு வாசலில் வண்ணப்பொடிகளால் மயில் கோலம் வரையப்பட்டிருந்தது. அதேபோல் வீட்டின் பூஜை அறையில் மயில் மற்றும் வேல் வரைந்தும், 9 வகையான காய்கறிகளால் உணவு சமைத்து படையல் போட்டு சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து தறிகூடங்களுக்கு சென்று பூஜை செய்து தங்களது தொழிலை துவங்கினர்.
The post கலசப்பாக்கம் அருகே நெசவாளர்கள் மயிலார் பண்டிகை கொண்டாட்டம் appeared first on Dinakaran.