கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வழித்தடத்தில் 50% பணிகள் முடிவு நவம்பரில் மயிலாப்பூர் கச்சேரி சாலையை வந்தடைகிறது பிளமிங்கோ இயந்திரம்: மெட்ரோ அதிகாரிகள் தகவல்

3 months ago 21

சென்னை: கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 40 கி.மீ. மேல் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதேபோல், 76 கி.மீ உயர்மட்ட பாதையில், 80 ரயில் நிலையங்கள் என 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்த பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட பாதையில் தூண்கள் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், சென்னையில், பல்வேறு இடங்களான கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், சேத்துப்பட்டு, மாதவரம் உள்ளிட்ட இடங்களில் சுரங்கம் தோண்டும் பணி வேகம் எடுத்துள்ளது. இவற்றில் 4வது வழித்தடம் சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது.

இது, போரூர், விருகம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், பனகல் பூங்கா, நந்தனம், ஆழ்வார்பேட்டை, திருமயிலை, கச்சேரி சாலை வழியாக கலங்கரை விளக்கத்தில் முடிவடைகிறது. இதில் 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த வழித்தடத்தில் சுரங்கப் பாதை பகுதிகள் இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறியதாவது: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணி 37.38 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதில் 3வது வழித்தடமான மாதவரம் பால் பண்ணை – சிப்காட் வழித்தடப் பணி 32.19 சதவீதம், 4வது வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தடம் பணி 50.32 சதவீதம், 5வது வழித்தடமான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வழித்தடம் பணி 33.84 சதவீதம் முடிவடைந்துள்ளன. 4வது வழித்தடமான கலங்கரை விளக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது. கீழ் அடுக்கு வழியில் 700 டன் எடை கொண்ட பிளமிங்கோ இயந்திரம் 852 மீட்டரும், மேல் அடுக்கு வழியில் இரண்டாவது இயந்திரமான கழுகு 732 மீட்டரும் துளையிட்டுள்ளது. பிளமிங்கோ இயந்திரமானது நவம்பர் மாதத்திற்குள் மயிலாப்பூர் கச்சேரி சாலையை வந்தடையும்.

குறிப்பாக, இந்த பகுதியில் மிக கடினமாக பாறைகளுடன் கூடிய வண்டல் மண் உள்ளதால் துளையிடுவதில் மிகவும் கடிமாக உள்ளது. பொதுவாக சுரங்கங்கள் ஒரு நிலையத்தில் இணையான முறையில் கட்டப்படும். ஆனால் மயிலாப்பூரில் அடுக்கு நிலையமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாலும், நிலம் மற்றும் இடவசதி காரணமாக சரங்கப்பாதைகளில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே கீழ் சுரங்கப்பாதையும், அதை தொடர்ந்து மேல் சுரங்கப்பாதையும் கட்டப்பட உள்ளது. அதேபோல் பனகல் பூங்கா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் பெலிகான் என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் மேல் அடுக்கு வழியில் 1254 மீட்டரில் 635 மீட்டர் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. மயில் என்ற இயந்திரம் கீழ்அடுக்கு வழியில் 1254 மீட்டரில் 463 மீட்டர் சுரங்கம் தோண்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் 16.2 கிலோ மீட்டர் சுரங்கம் தோண்டுவதில் 2.7 கிலோ மீட்டர் பணி முடிவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வழித்தடத்தில் 50% பணிகள் முடிவு நவம்பரில் மயிலாப்பூர் கச்சேரி சாலையை வந்தடைகிறது பிளமிங்கோ இயந்திரம்: மெட்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article