பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உணவுப்பழக்கத்தில் பெரும்பாலும் நாம் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், அவர்களின் கற்றல் திறனோடு உணவுப்பழக்கத்துக்கும் தொடர்பு உண்டு என்பதை முதலில் நினைவில்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாகப் பார்வைத்திறனைத் திடமாக்கும் உணவுகளை வழங்க மறந்துவிடக்கூடாது. முதல் நாள் இரவு சாப்பிட்டுவிட்டு சுமார் 10 முதல் 12 மணி நேரம் வரை ஏதும் சாப்பிடாமல் தூங்கும் மாணவர்கள் காலையில் அவசர அவசரமாகக் குளித்து சீருடை அணிந்து சரியாக சாப்பிடாமல், அல்லது பட்டினியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்று. நாகரிக வகை உணவுகளான ஜங்க் ஃபுட் வகைகளைப் பள்ளிக்கூட மாணவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பார்வையிழப்பைத் தடுக்கும் உணவுப்பழக்கம்
*வைட்டமின் ஏ: ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தை களின் கண்கள் உலர்ந்துபோகச் செய்யும் பிரச்னைக்கும், மாலைக்கண் நோய்க்கும் முக்கியமான காரணம் வைட்டமின் ‘ஏ’ சத்துக் குறைபாடுதான். வைட்டமின் ‘ஏ’ பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பப்பாளி, முட்டை மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.
*வைட்டமின் பி: பார்வை நரம்பின் செயல்பாட்டிற்குக் காரணமாக இருப்பது வைட்டமின் ‘பி’. வைட்டமின் ‘பி’ அரிசி, கோதுமை, முளைகட்டிய தானியங்கள், பீன்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.
*வைட்டமின் சி: நமது கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ‘சி’ மிகவும் அவசியம். வைட்டமின் ‘சி’ஆரஞ்சுப் பழம், நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா, எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.
கற்றல் குறைபாட்டின் பின்னணியில் பார்வைத்திறன்
கற்றலில் குறைபாடு என்பது பள்ளி மாணவ மாணவியர்களின் மற்றுமொரு முக்கிய பிரச்னை ஆகும். பொதுவாகக் குழந்தைகளுக்கு ஒரு வயது முதல் ஏழு வயது வரை இந்தக் குறைபாடு ஓரளவு இருக்கும். ஆனாலும் சிலருக்கு மேலும் சில வருடங்கள் இது நீடிக்கலாம். இது தனி நபர் நடத்தை சார்ந்த விஷயமாக தெரிந்தாலும் இந்தக் குறைபாட்டின் பின்னணியில் கண்பார்வைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. சில நேரங்களில் பார்வைத்திறன் குறைபாடு பல குழந்தைகளுக்குக் கற்றலில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கு கண் பரிசோதனைக்குப் பரிந்துரைத்து உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
கற்றலில் குறைபாட்டின் அறிகுறிகள்
*குழந்தைகள் அடிக்கடி எழுத்துகளை மாற்றியோ அல்லது தலைகீழாகவோ எழுதுவது மற்றும் படிப்பது.
*சில நேரங்களில் மட்டும் மிகவும் மோசமான கையெழுத்தை வெளிப் படுத்துவது.
*வாசித்தலில் குறைபாடு மற்றும் வாசிப்பதில் வெறுப்பை ஏற்படுத்துவது.
*எழுதும்போதும் கணக்கு (கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலின்போது) பாடவேலை செய்யும்போதும் தொடர்ந்து தவறு செய்வது.
*இட வலமாக அல்லது வலதுபுறம் எழுத வேண்டிய எழுத்துகள் மற்றும் எண்களை இடதுபுறமாக
பயன்படுத்துவது.
*சொல்ல வேண்டிய செய்திகளைச் சரியாக எழுத முடியாமல் தவிப்பது.
*பலரோடு சேர்ந்திருக்கும்போது பொருத்தமற்ற செயல்களை
அடிக்கடி செய்வது.
*பிறர் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பது.
இதுபோன்ற பழக்க வழக்கங்கள் இருக்குமேயானால், முதலில் ஒரு கண் மருத்துவரிடம் பரிசோதித்து பார்வைக்குறைபாடு இருக்குமேயானால் அதனை சரி செய்வதும் அல்லது ஒரு குழந்தைநல மருத்துவரிடமோ அல்லது அவர் பரிந்துரைக்கும் வல்லுநரிடமோ ஆலோசனை பெறுவதும் மிகவும் அவசியமாகும்.
குழந்தைகளின் வளர்ச்சியும் பார்வைத்திறனில் வேறுபாடும்
குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப பார்வைத்திறனிலும் வேறுபாடு தொடர்கிறது. எனவே, கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாகக் கண் பரிசோதனை செய்துகொண்டு பார்வைத்திறனில் வேறுபாடு இருக்கும் பட்சத்தில் கண்ணியலாளர்கள் (ஆப்டோமெட்ரிஸ்ட்) மற்றும் கண் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கண்ணாடியையோ அல்லது கான்டாக்ட் லென்ஸையோ கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் பார்வைத்திறனில் மாறுபாடு இருக்கும்பட்சத்தில் பழைய கண்ணாடி அல்லது கான்டாக்ட் லென்ஸை தொடர்ந்து அணிவது, மாற்றம் ஏற்பட்ட அல்லது தற்போதைய பார்வைத்திறனுக்குப் பொருத்தமில்லாத தவறான கண்ணாடியை அணிவதாகும். அது மேலும் கண்களுக்கு இடையூறாக இருப்பதோடு பாதிப்பை உண்டாக்கும்.
பார்வைக் குறைபாட்டுடன் தொடர்புடைய கற்றல் குறைபாடுகள்
குழந்தைகள் படிக்கும்போதும் குறிப்பாகக் கணிதப் பாடங்களில் பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்றவற்றை கையாளும்போதும் அவற்றைப் புரிந்து கொள்வதற்குக் குழந்தைகளுக்குத் தாமதமோ அல்லது வெறுப்போ ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் பார்வைத்திறன் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் இத்தகைய பிரச்னை உள்ள குழந்தைகளுக்குக் கண்ணாடி அணிந்த பிறகு இந்தக் குறை நிவர்த்தியாகி உள்ளது. ஆனாலும் குழந்தைக்குக் கற்றலில் குறைபாடு என்பதை உறுதி செய்வதற்குச் சில பரிசோதனைகள் உள்ளன. எழுதும் திறன் (Writing Ability), பேசும்திறன்(Speaking Ability), படிக்கும் திறன்(Reading Ability) எளிய கணக்குகளைக் கையாளும் திறன் (Numerical Ability) மற்றும் சிறிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன் (Reasoning Ability) என்ற முறைப்படி சில பரிசோதனைகளைச் செய்வதும் நடைமுறையில் உள்ளது.
கற்றல் – பார்வை – மூளை இவற்றுக்கிடையேயான தொடர்பு
கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பார்வைத்திறன் சரியாக இருந்தாலும் மேலே குறிப்பிட்ட பரிசோதனைகள் மூலமே ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும். ஆனாலும் பார்வை என்னும் புலன் மூளையின் செயல் அடிப்படையில் நடைபெறக்கூடிய ஒன்று. அதேபோன்று கற்றல் என்பதும் மூளையின் செயல் அடிப்படையில் நடைபெறக்கூடிய ஒன்று. அந்த வகையில் பார்வைத்திறன் மட்டுமல்லாது கண்ணின் அமைப்பு, கண் இயங்கும் விதம் போன்றவையும் ஒரு தனிநபரின் கற்றல் திறமையை நிர்ணயிக்கிறது என்பது உண்மை.
கற்றலும் பார்வையின் மூன்று முக்கியமான காரணிகளும்
பொதுவாக மாணவர்களுக்கு கற்றல் எனும் செயல்பாட்டில் கண்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதன் மூலமே மூளையின் திறனும் அறிவுத்திறனும் மேம்படுகிறது. இதற்குப் பார்வையின் மூன்று முக்கியமான காரணிகள் சிறப்பாக அமைந்தால் மட்டுமே கற்றலில் மேம்பாடு என்பது சாத்தியமாகிறது. அவை,
1. கண்கள் அமைந்திருக்கும் விதம் (State of the eyes)
2. கண்கள் செயல்படும் விதம் (Functioning of the eyes)
3. பார்வை எனும் புலன் (Visual Perceptions)
1. கண்கள் அமைந்திருக்கும் விதம்
கற்றல் எனும் செயல்பாடு கண்கள் உள்ளடங்கிய ஒரு குழு செயல்பாடாகும். கண்கள் அமைந்திருக்கும் விதத்தைப் பொறுத்தே பொதுவான கண் நலம் மேம்படுகிறது. தசைநார்கள் சரியாக அமைந்திருக்காதபட்சத்தில் மாறு கண் குறைபாடு (Squint), கண் இமைகளைத் திறக்க முடியாமை (Ptosis)போன்ற குறைபாடுகளும் நேரிடுகின்றன. மேலும் பார்வை அளவு (Power), கிட்டப்பார்வைக் குறைபாடு (Myopia – Short sightedness), தூரப்பார்வைக்குறைபாடு (Hypermetropia – long Sightedness),போன்ற பார்வைத்திறன் குறைபாடுகளுக்கும் காரணமாகிறது. உதாரணமாக, நீளமான கண்கள் உடையவர்களுக்கு கிட்டப்பார்வைக்
குறைபாடும், அகலமான கண்கள் உடையவர்களுக்குத் தூரப்பார்வைக் குறைபாடும் வருகிறது.
2. கண்கள் செயல்படும் விதம்
நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்கள் கண்ணின் முன்புறம் உள்ள கார்னியாவில் குவிந்து, கார்னியாவைத் தொடர்ந்து இருக்கக் கூடிய பகுதியான கருவிழியானது, பார்ப்பவருக்கும் பார்க்கும் பொருளுக்கும் இடைப்பட்ட தூரத்தைப் பொறுத்து, விரிந்தோ அல்லது சுருங்கியோ கண்ணின் பாப்பா மற்றும் லென்ஸ் வழியாக ஒளிக்கதிர்களை கண்ணுக்குள்ளே அனுப்பி, விழித்திரையில் பிம்பம் சரியானபடி பதிவாகும்படி செயல்பட வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் தன்னைவிட உயரத்தில் இருக்கும் கரும்பலகையையோ, ஆசிரியர் கரும்பலகையில் எழுதுகின்ற பாடங்களையோ, ஆசிரியரையோ பார்க்கமுடியும். கண்கள் சரிவர செயல்படவில்லையென்றால், அவை களைப்படைந்து கண்கள் வலிப்பது, பொருட்கள் இரண்டாகத் தெரிவது, அதன் காரணமாகப் பாடத்தில் கவனம் செலுத்தமுடியாமல் போவது போன்ற பிரச்னைகள் வருகின்றன. கண்களின் அசைவைக் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் குழந்தைகள் படித்துக்கொண்டிருந்த வார்த்தைகளை அல்லது வரியைத் தவற விட்டுவிட்டு தேடக்கூடிய சூழ்நிலை அடிக்கடி ஏற்படுகின்றது.
3. பார்வை எனும் புலன்
நாம் பார்க்கக்கூடிய பொருளின் பிம்பம் விழித்திரையில் பதிவான பின் விழித்திரையைத் தொடர்ந்து இருக்கும் பார்வை நரம்பின் மூலமாகச் செய்திகள் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மூளையில் உள்ள பார்வை மண்டலம் என்னும் பகுதியில் நடைபெறும் மாற்றங்கள் காரணமாகப் பார்வை என்னும் புலனை நாம் பெறுகிறோம். நாம் எதனைப் பார்க்கிறோம், அதன் அடையாளம், அதன் முக்கியத்துவத்தை தீர்மானித்தல், அதனை ஏற்கனவே நாம் சேமித்து வைத்திருக்கும் செய்தியோடு இணைத்தல் போன்ற பல பணிகளின் ஒட்டுமொத்த உருவமே/செயலே புலன் எனப்படுகிறது.
குழந்தைகளை/மாணவர்களைப் பொறுத்தமட்டில் இந்நிலையில் கண்களும், மூளையும்,கைகளும் ஒருங்கிணைந்து பார்வை எனும் புலனை அனுபவிக்கிறது. பார்வை எனும் புலன், பார்வை எனும் ஞாபகசக்தியையும் உள்ளடக்கியதாகும். உதாரணமாக, ஏற்கனவே நாம் பார்த்த வார்த்தைகள், நிறம் அல்லது எண்கள் போன்றவற்றை ஏற்கனவே நினைவில் வைத்திருந்து அவற்றை மீண்டும் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்போது நினைவுபடுத்திக் கொள்வது போன்ற செயல் ஆகும்.
கற்றலில் குறைபாட்டிற்கான பார்வை சார்ந்த முக்கிய அறிகுறிகள்
*எவ்வளவு தூரத்திலிருந்து பொருட்களைப் பார்த்தாலும் கலங்கலான பார்வையை உணர்வது.
*பொருட்கள் இரண்டாகத் தெரிவது.
*கண்கள் குறுக்குவாட்டில் அமைந்திருப்பது அல்லது ஒருசாய்ந்து இருப்பதுபோல அமைந்திருப்பது.
*குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட பகுதியை எழுதாமல் தாமதிப்பது.
*படித்தவற்றை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பதில் சிரமம்.
*சில வார்த்தைகளை விட்டுவிடுவது அல்லது மீண்டும் மீண்டும் எழுதுவது.
*மேலும் சில நேரங்களில் ஒரே மாதிரியான வார்த்தைகளால் குழப்பம் ஏற்படுவது.
*உருவங்களையும், வடிவங்களையும், வரைபடங்களையும் நினைவுபடுத்திக் கொள்வதில் சிரமம்.
*வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாமல் செயல்படுவது.
*படிக்கும்போதும் எழுதும்போதும் தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் வருவது.
*கண்கள் உறுத்துதல் அல்லது எரிவது போன்று உணருதல்.
*நிறங்களை வேறுபடுத்திக் காண்பிப்பதில் சிரமம்.
கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளுக்கு, உளவியலாளர்கள் (Psychologist), குழந்தைகள் மனநல மருத்துவர்கள் (Peiatric Psychologist), நரம்பியல் வல்லுநர்கள் (Neurologist) மற்றும் குழந்தைகள் நல நிபுணர்கள் (Pediatricians) கொண்ட குழுவின் ஆலோசனையோடு குழந்தைகள் கண் மருத்துவ நிபுணர்களின் (Pediatric Ophthalmologist) ஆலோசனையும் அவசியம் தேவைப்படும். அறிகுறிகள் தென்படும்போது அவற்றைக் கண்டு அஞ்சாமல், முறையோடு அணுகிப்பார்த்து நோய் வரும் முன்காப்பது, நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து ஆவன செய்வது இன்றைய நாளில் நம் குழந்தைகளுக்கு, அவர்கள் தம் இலக்கினை அடைய நாம் செய்யும் மிகப் பெரிய உதவியாகும்.
The post கற்றல் குறைபாட்டை உருவாக்கும் பார்வைக் குறைபாடுகள்! appeared first on Dinakaran.