கர்ப்பிணியான பாகிஸ்தானின் சீமா ஹைதர் விவகாரம்; எனது 4 குழந்தைகளையும் என்னிடம் ஒப்படையுங்கள்..! ஒன்றிய அமைச்சரிடம் முதல் கணவர் கோரிக்கை

2 hours ago 2

லக்னோ: கர்ப்பிணியான பாகிஸ்தானின் சீமா ஹைதர் விவகாரத்தில், தனது 4 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு அந்த பெண்ணின் முதல் கணவர் ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனா என்பவருக்கும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு உட்பட்ட ஜாகோபாபாத்தைச் சேர்ந்த 4 குழந்தைகளின் தாயான சீமா ஹைதர் என்பவருக்கும் சமூக வலைதளங்களில் பப்ஜி விளையாடும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் ஆன்லைனில் நேசித்த நிலையில், சீமா ஹைதர் தனது 4 குழந்தைகளுடன் கடந்த 2023 மே மாதம் கராச்சியில் இருந்து நேபாளம் வழியாக தனது கணவரிடம் இருந்து பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக இந்தியா (உத்தரபிரதேசம்) வந்தார்.

சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சீமா ஹைதர் ஊடுருவிய விசயம் கடந்த 2023ம் ஆண்டு போலீசுக்கு தெரிந்தது. அதனால் சீமாவையும் சச்சினையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சில நாட்களுக்கு பின்னர் 4 குழந்தைகளின் தாயான சீமா ஹைதரை, சச்சின் மீனா திருமணம் செய்து கொண்டார். தற்போது சீமா ஹைதர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சீமாவின் முதல் கணவரான பாகிஸ்தானை சேர்ந்த குலாம் ஹைதர், ஒன்றிய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு வீடியோ மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், ‘பிரபல பாகிஸ்தான் வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான அன்சார் பர்னியின் உதவியுடன் எனது 4 குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலையடைந்துள்ளேன். எனது மனைவியையும், 4 குழந்தைகளையும் மீட்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 2023 முதல் எனது 4 குழந்தைகளை என்னால் பார்க்க முடியவில்லை. எனது மனைவியின் செயல்பாட்டால், எனது 4 குழந்தைகளும் இந்தியாவில் சிக்கித் தவிக்கின்றனர்.

எனது மனைவி தனது பெயரையும் மதத்தையும் மாற்றிக் கொண்டார். எனது குழந்தைகளையும் மாற்றியுள்ளார். நான் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தபோது, அவர் இந்தியாவிற்குள் எனது 4 குழந்தைகளுடன் சென்றார். எனவே எனது 4 குழந்தைகளையும் என்னுடன் ஒப்படைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். சீமா – சச்சின் ஜோடிகளின் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், தற்போது சீமாவின் முதல் கணவர் தனது 4 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கர்ப்பிணியான பாகிஸ்தானின் சீமா ஹைதர் விவகாரம்; எனது 4 குழந்தைகளையும் என்னிடம் ஒப்படையுங்கள்..! ஒன்றிய அமைச்சரிடம் முதல் கணவர் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article