கர்நாடகாவில் தொடரும் திடீர் மாரடைப்பு மரணங்கள்.. மக்கள் அதிர்ச்சி

9 hours ago 2

மங்களூரு,

கர்நாடகாவில் மாரடைப்பு தொடர்பான இறப்புகள் அதிகரித்து வரும் சம்பவங்கள், பொதுமக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் இதய பரிசோதனைக்காக குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகத்தில் மாரடைப்புக்கு மேலும் 6 பேர் பலியான தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா குருபரகேரி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகன் மனோஜ் குமார் (வயது 10). இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். ஏற்கனவே சிறுவனுக்கு இதயத்தில் சிறிய அளவு துளை இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிறுவன் பெங்களூரு ஜெயதேவா இருதய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று பள்ளியில் இருந்த சிறுவனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆசிரியர்கள் சிறுவனை மீட்டு குண்டலுபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு பலியானதாக தெரிவித்தனர்.

இதேபோல பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா தாலுகா கொக்கிதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகந்தேஷ் நாயக் (38). நேற்று அதிகாலை இவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். மகந்தேஷ் நாயக் மாரடைப்பு காரணமாக இறந்துபோனதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா உல்லிகேரி கிராமத்தை சேர்ந்தவர் அசோக் ஜேரிகவாடா (40), சரக்கு வேன் டிரைவர். நேற்று காலை இவர் சவதத்தியில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் சரக்கு வேன் ஓட்டிச் சென்றிருந்தார். அங்கு சரக்கு வேனை நிறுத்திவிட்டு அவர் அமர்ந்து இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. சக தொழிலாளிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். அதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இளம்பெண் உயிரிழப்பு

தார்வார் மாவட்டம் உப்பள்ளி புரோகித் நகரை சேர்ந்தவர் ஜீவிதா குசாகூர் (வயது 26). எம்.எஸ்.சி. படித்து முடித்துள்ள இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவோடு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஜீவிதா திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர், ஜீவிதா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர். இதை கேட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். பலியான ஜீவிதாவின் தந்தை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அதுபோல் தாவணகெரே (மாவட்டம்) டவுனில் ஜெயநகரை சேர்ந்தவர் முருகேஷ். இவர் தொழில் அதிபர் ஆவார். இவரது மனைவி ரேகா. இந்த தம்பதிக்கு அக்ஷய் (வயது 22) என்ற மகன் இருந்தார். இவர் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அக்ஷய் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனே பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்கமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அக்ஷய் மாரடைப்பால் மயங்கி விழுந்ததாகவும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். தாவணகெரே மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ராமநகர் மாவட்டம் கொல்லரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (வயது 27). கூலி தொழிலாளி. நேற்று காலை இவர் மாடுகளை மேய்ப்பதற்காக வீட்டின் அருகே உள்ள தோட்டத்துக்கு சென்றிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராமநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கிரீசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். திருமணமான கிரீசுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மது, புகையிலைப்பழக்கம் இல்லாத நிலையில் கிரீஷ் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் மாரடைப்பு மரணங்களால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

Read Entire Article