திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இனி லட்டுடன் 'புத்தக பிரசாதம்'

5 hours ago 2

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஏழுமலையானின் மகிமைகளை எடுத்துரைக்கும் வகையில் ஆன்மிக நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. தேவஸ்தானம் சார்பில் ஆன்மிக புத்தகங்களும் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 'புத்தக பிரசாதம்' என்ற திட்டத்தை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. அதன்படி, இந்து பாரம்பரியங்கள் மற்றும் ஏழுமலையானின் மகிமையை போற்றும் வகையிலான புத்தகங்கள், பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

எனவே, திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இனி திருப்பதியின் பாரம்பரிய பிரசாதமான லட்டு மட்டுமின்றி ஒரு ஆன்மிக புத்தகமும் பிரசாதமாக கிடைக்கும். இந்து மதத்தின் மிகப்பெரிய பாரம்பரியத்தை பரப்பும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடுவின் வழிகாட்டுதலின்படி இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுவாமி தரிசனத்திற்காக வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் காத்திருக்கும் பக்தர்களுக்கு இந்த புத்தகங்கள் வழங்கப்படும். ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலும் இப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இந்த புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. முதலில் இந்த புத்தகங்கள் தெலுங்கு மொழியில் மட்டும் அச்சிடப்படுகின்றன. பின்னர் படிப்படியாக மற்ற மொழிகளிலும் அச்சிடப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

Read Entire Article