பெங்களூரு: கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதனால் அரசுக்கு செலவு அதிகமாகி வருகிறது. அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக அரசு கடந்த ஜனவரியில் பஸ் கட்டணம், பிப்ரவரியில் பெங்களூருவில் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 36 காசும், பால் விலை லிட்டருக்கு ரூ.4ம் அதிகரித்து அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில் டீசல் மீதான விற்பனை வரியையும் உயர்த்தியுள்ளது.
தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு விற்பனை வரி 18.44 சதவீதமாக உள்ளது. அது 21.17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது. இந்த டீசல் விலை உயர்வை விமர்சிக்கும் விதமாக கர்நாடக பாஜ தனது எக்ஸ் பக்கத்தில், முதல்வர் சித்தராமையாவின் புகைப்படத்துடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், சித்தராமையாவை காஸ்ட்லி டீசல் என்று கேலி செய்த பாஜ, வின் டீசல் என்றால் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ், சித்தராமையா ஸ்கேம் அண்ட் இன்ஜுரியஸ் என விமர்சித்துள்ளது.
The post கர்நாடகாவில் டீசல் விலை உயர்வு: முதல்வர் சித்தராமையாவை கேலி செய்து பாஜ பதிவு appeared first on Dinakaran.