
மைசூரு,
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொள்ளேகலா தாலுகாவுக்கு உட்பட்ட சிக்கின்துவாடி பகுதியருகே கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில், மாலே மகாதேஷ்வரா மலைக்கு புனித பயணம் மேற்கொள்வதற்காக ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
அப்போது, அவர்களுடைய கார் குறுகலான சாலையில் செல்லும்போது, எதிரேயிருந்து வந்து கொண்டிருந்த லாரி அவர்களுடைய வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில், 2 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தில் உள்ள 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அவர்கள் மைசூரு மற்றும் மாண்டியா மாவட்டங்களில் வசித்து வந்துள்ளனர். அவர்களின் உறவினர்கள் வருகைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். அவர்கள் வந்தபின்னர் உடல்கள் அடையாளம் காணப்படும். இந்த விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது.