ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பங்கேற்றார். தொடர்ந்து ஓசூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மாவட்டங்கள்தோறும் எஸ்சி., எஸ்டி., வன்கொடுமைகளை விசாரிக்கும் தனி காவல்நிலையங்களை அமைத்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அது போன்று அமைத்திட அரசை வலியுறுத்தியுள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கர்நாடகா அரசு செயல்படுத்தியுள்ளதை வரவேற்று, பிற மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில கோயிலில் வழிபடுவதில் சில ஆண்டுகளாக பிரச்னை உள்ளது.
தேர் வடத்தை தொட்டு வழங்குவது ஆதிதிராவிடர்களின் பாரம்பரிய உரிமை. அதை செய்ய சென்றவர்களை சில இளைஞர்கள், சாதியை சொல்லி தாக்கியுள்ளனர். இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பள்ளி மாணவர்கள் மீதும், காயமடைந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை கண்டித்து, எனது தலைமையில் புதுக்கோட்டையில் வரும் 13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஜம்மு காஷ்மீரில், இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் எத்தனை இடங்கள் என்பது குறித்து பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post கர்நாடகாவில் உள்ளதுபோல் வன்கொடுமைகளை விசாரிக்க தமிழகத்தில் தனி காவல்நிலையம்: திருமாவளவன் எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.