கர்நாடகத்தை சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவிற்கு ‘வைக்கம் விருது’: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

1 month ago 4

சென்னை: 2024ம் ஆண்டிற்கான ‘வைக்கம் விருது’ கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேவநூர மஹாதேவாவிற்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி ‘எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாருக்கு நினைவுக்கூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17ம் தேதி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ்’ அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, 2024ம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாதெமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அதன்படி, வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவா-விற்கு ரூ.5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கேரள மாநிலம் வைக்கத்தில் இன்று நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடகத்தை சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவிற்கு ‘வைக்கம் விருது’: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article