சென்னை: விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு அரசு வேலை தரப்படும் என அறிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அரசு மருத்துவர்களுக்கு ஊதியப்பட்டை நான்கை வழங்கிட வேண்டும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் எஸ். பெருமாள் பிள்ளை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டுத் துறையின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்தி அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் முனைப்போடு செயல்பட்டு வந்ததை காண முடிந்தது. இந்த நிலையில் துணை முதல்வர் என்ற வகையில் இன்னும் பல மடங்கு வீரியத்துடன் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கிறோம்.