கரூர்: கரூர் மாவட்டம் புலியூரில் வணிக வரித்துறை அலுவலக புதிய கட்டிட பூமி பூஜை நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டதை விட 55 நிமிடங்கள் முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்றார். இதனால் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.சிவகாமசுந்தரி வருகைக்காக 10 நிமிடங்கள் காத்திருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அமைச்சர் வந்து விட்டதால் தாமதமாகி விட்டதாக எம்எல்ஏ வருத்தம் தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சி பகுதியில் நூலக கூடுதல் கட்டிடம், பள்ளிகளில் குடிநீர் தொட்டி, கழிப்பிடங்கள், சமையலறை, சுற்றுச்சுவர், பள்ளி கட்டிட மராமத்து, பேவர் பிளாக் அமைத்தல் மற்றும் புலியூரில் வணிக வரித்துறை கட்டிடம் என ரூ.3.60 கோடி பணிகளுக்கான பூமி பூஜை இன்று (நவ. 23ம் தேதி) நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார்.