கரூர் மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

3 months ago 6

கரூர், பிப். 10: கரூர் மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் இன்று நடைபெற உள்ளதாக கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழக அரசு பொது சுகாதாரத்துறையின் சார்பாக பிப்ரவரி 10ம்தேதி அன்று தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெறவுள்ளது. அதில், விடுபட்ட குழந்தைகளுக்கு பிப்ரவரி 17ம்தேதி அன்று குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படவுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக குடற்புழு நீக்க மாத்திரைகள் 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட (மொத்தம் 2,39,236) மற்றும் 20-30 வயதுடைய பெண்கள் (கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து பிற பெண்களுக்கு) குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக, ரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும். குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பள்ளி வருகை பாதிப்படாமலும் தவிர்க்கப்படும். இதனால், மாணவ, மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளாலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்க வசதியாக இருக்கும்.

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்களின் மூலமாக அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வந்து குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படவுள்ளது. ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த சமுதாயத்தில் இந்த குடற்புழு நீக்க மருந்தினை உட்கொள்ளுவதால் சுற்றுப்புறத்தில் குடற்புழுவின் எண்ணிக்கை குறைகிறது.இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையினால் 6-59 மாத குழந்தைகளில் 73 சதவீதமும், 15-49 வயதினரிடையே 56 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் குறிப்பாக கிராமப்புற குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 33 சதவீதம் குழந்தைகள் உடல் வள ர்ச்சி குன்றியும், 36 சதவீத குழந்தைகள் எடை குறைவாகவும் உள்ளனர். இந்த குறிப்பிட்ட குறைபாடுகள் அனைத்தும் இந்த மருந்து உட்கொள்வதன் மூலம் வராமல் தடுக்கப்படுகிறது. எனவே 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் மற்றும் 20-30 வயதுடையபெண் கள் அனைவரும் அவசியம் இந்த மரு ந்தை உட்கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கரூர் மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article