கரூர் மாவட்டத்தில் அதிகளவில் வாழும் தேவாங்குகளை பாதுகாக்க கடவூரில் சரணாலயம்: அழிவில் இருந்து பாதுகாக்க வனத்துறை அதிரடி நடவடிக்கை

3 months ago 18

கரூர்: உலகில் ஒருசில இடங்களில் மட்டுமே காணப்படும் சாம்பல் நிற தேவாங்கு அறிய வகை பாலூட்டி. மனிதர்களின் முன்னோடி என கருதப்படும் வனவிலங்காக கருதப்படுகிறது. தென் தமிழக நிலப்பரப்பில் ஒன்று செந்தேவாங்கு, மற்றொன்று சாம்பல் நிற தேவாங்கு. இந்த இரண்டு இனங்களும் ஐயூசிஎன் (இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்) அமைப்பால் அழியும் நிலையில் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மட்டுமே வெளியில் வந்து இரை தேடும் பழக்கம் கொண்ட தேவாங்கு பகல் நேரத்தில் மரக்கிளைகளில் கூட்டமாக தங்கி வாழ்கிறது. மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட இவைகள் மனிதர்களை பார்த்ததும் பதுங்கி விடுகிறது. இவற்றின் ஆயுள்காலம் 12 முதல் 15 ஆண்டுகள். சிறிய மரங்கள், மரப்பொந்துகள், பாறைகளின் இடுக்குளில் இவைகள் வாழ்கிறது. இவை பெரும்பாலும் இலையுதிர் முட்புதர்காடுகள் உள்ள தாவர இனங்களான திருகுக்கள்ளி, வெப்பாலை, உசில், பொரசு, முள்கிழுவை மற்றும் வெல்வேல் போன்ற மரக்கிளைகளிலும் வாழ்கின்ற உயிரினமாகும். வாழ்நாளில் பெரும்பாலும் மரக்கிளைகளிலேயே வாழ்கிறது.

இவை அடர்த்தி குறைந்த 300 முதல் 800 மீ உயரமுள்ள காடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 800 முதல் 1500 மீ உயரத்திற்கு மேல் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படுகிறது. பூச்சிகள் இவற்றின் முக்கிய உணவு. தட்டான்பூச்சி, வெட்டுக்கிளி, வண்டுகள் போன்ற பூச்சிகளையும், இலைகள், செடி மற்றும் கொடிகளில் கொழுந்து இலைகளையும் உணவாக உட்கொள்ளும். மாலை 6 மணிக்கு மேல் அதிக வேகத்துடன் இரை தேட துவங்குவது இதன் சுபாவம். கரூர் மாவட்டம் கரூர் வனச்சரத்துக்கு உட்பட்ட கடவூர் பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டம் அய்யலுர் மற்றும் நத்தம் வனச்சரகத்திலும் அரிய வகை உயிரினமான தேவாங்குகள் அதிகளவில் வாழ்கின்றன. அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் தேவாங்குகள் வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி, அட்டவணைப் படுத்தப்பட்ட பட்டியல்1ல் உள்ள புலி, சிங்கம் ஆகியவற்றின் வரிசையில் இடம் பெற்றுள்ளது. அரிய வகை உயிரினங்களான தேவாங்குகளை பாதுகாக்கும் வகையில் கடவூர், அய்யலூர், நத்தம் வனச்சரங்களை உள்ளடக்கிய பகுதிகளை ஒருங்கிணைத்து சரணாலயம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.

இதற்காக கரூர் மாவட்ட வனச்சரகத்துக்கு உட்பட்ட கடவூர் காப்புக்காடுகளில் 78 பகுதிகள் அடையாளப் படுத்தப்பட்டு, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேவாங்கு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. கடவூர் காப்புக்காடு பகுதியில் நீதிமன்ற உத்தரவின்படி திண்டுக்கல் மற்றும் கரூர் வனக்கோட்ட பகுதிகளில், கோவை மாவட்டம் ஆணைக்கட்டி சேக்கான் பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தினர், வனத்துறையினர்களுடன் இணைந்து முதல் முறையாக தேவாங்கு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன்படி, கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கடவூர் காடுகளில் 8844 தேவாங்குகளும், திண்டுக்கல் மாவட்ட காடுகளில் 8412 தேவாங்களும் என மொத்தம் 17 ஆயிரத்து 256 தேவாங்குகள் உள்ளது என கணக்கெடுக்கப்பட்டுள்ளன. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் தேவாங்குகள் காணப்படுவதால் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு கரூர்-திண்டுக்கல் எல்லை பரப்பை சாம்பல் நிற தேவாங்குகளின் முக்கிய இடமாக, அதாவது “ஹாட்ஸ்பாட்’’ ஆக அறிவித்துள்ளது.

இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 12ம்தேதி தேவாங்கு சரணாலயத்துக்கான அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டதால் பணிகள் கடந்த 2 ஆண்டாக நடந்து வருகிறது. விவசாய பயிர்களுக்கு தெளிக்கப்படும் ரசாரன உரங்களால், பயிர்கள் மேல் அமர்திருக்கும் பூச்சிகளை உட்கொள்ளும்போது, தேவாங்கு இறப்பு சதவீதம் அதிகரிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. 1972ம் ஆண்டில் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி தேவாங்கை வனவிலங்கு பட்டியலில் அட்டவணை 1ன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.

பாதுகாப்பை உறுதிசெய்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை
தேவாங்கு சரணாலய அறிவிப்புக்கு பிறகு அதனை மேலும், மெருகேற்றும் வகையில், தற்போது இரண்டு மாவட்ட வனத்துறையினர்களும், மேனேஜ்மெண்ட் பிளான் என்ற திட்டத்தின் அடிப்படையில் குழு அமைத்து, தேவாங்கு பாதுகாப்பு குறித்து அறிக்கையை ஒன்றிய அரசுக்கு விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. இதனைத் தொடர்ந்து, எக்கோ சென்சிட்டி ஸோன் (சூழல் உணர்திறன் மண்டலம்) மூலம், தேவாங்கு வாழும் பவுண்டரி லைன்கள் வரன்முறை செய்வது, இதன் அருகில், குவாரிகள், கெமிக்கல் நிறுவனங்கள் போன்றவை இல்லாததை உறுதி செய்வது போன்றவற்றை உறுதி செய்து, அதனையும் அறிக்கையாக ஒன்றிய அரசுக்கு வனத்துறையினர் தாக்கல் செய்ய உள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஒரு முழுமை பெற்ற தேவாங்கு சரணாலயம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை இணைத்து செயல்படவுள்ளன.

The post கரூர் மாவட்டத்தில் அதிகளவில் வாழும் தேவாங்குகளை பாதுகாக்க கடவூரில் சரணாலயம்: அழிவில் இருந்து பாதுகாக்க வனத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article