சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா, சென்னை, வடபழனியில் உள்ள எஸ் ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மகளிர் திருவிழா நிகழ்ச்சியில் துணை செய்தி ஆசிரியரும், ‘பெண் இன்று’ பொறுப்பாளருமான பிருந்தா சீனிவாசன் வரவேற்றார். விழாவை, மகப்பேறு மருத்துவரும் ‘மித்ராஸ்’ ஃபவுண்டேஷன் நிறுவனருமான டாக்டர் அமுதா ஹரி, சமூக செயற்பாட்டாளர் ஓவியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மருத்துவர் அமுதா ஹரி பேசியதாவது: தோற்றம் பெண்களுக்கு மிகவும் முக்கியம். ஆனால், ஆரோக்கியத்துடன், தெளிவான, ஞானச் செருக்கோடு இருப்பதே பெண்களுக்கு அழகு. ஒரு தலைவலிக்கு உடனடியாக மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள், உடலின் பிற பிரச்சினைகளை உடனுக்குடன் கவனிப்பது இல்லை.