கருண் நாயர் மட்டுமல்ல.. அந்த 2 வீரர்களையும் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் - ரெய்னா கோரிக்கை

3 hours ago 2

மும்பை,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதே சமயம் சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், கருண் நாயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இதில் கருண் நாயர் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி விதர்பா அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். சிறப்பாக விளையாடிய கருண் நாயர் 5 சதம் உள்பட 779 ரன்கள் அடித்தார். அதன் காரணமாக அவருக்கு சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கருண் நாயர் மட்டுமின்றி நிதிஷ் ரெட்டி, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது இல்லாவிட்டாலும் விரைவில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "700 ரன்களை அற்புதமான சராசரி மற்றும் பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த கருண் நாயரின் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். அவருடைய பெயர் தேர்வின்போது விவாதிக்கப்பட்டு இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அடுத்ததாக நிறைய போட்டிகள் நடைபெற உள்ளன. டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடித்தும் அவர் துரதிர்ஷ்டவசமாக நீக்கப்பட்டார். ஆனால் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புவதை அவர் காண்பிக்கிறார். எனவே வருங்காலங்களில் அவருக்கு தேர்வாளர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று கருதுகிறேன்.

ஆனால் தற்போதைய அணியில் சூர்யகுமார் யாதவ் இல்லை. நிதிஷ் ரெட்டியை பற்றியும் யாரும் பேசவில்லை. ஆஸ்திரேலியாவில் அவர் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். எந்த இடத்திலும் அவரால் பேட்டிங் செய்ய முடியும். சரியான கலவையை கொண்ட அணியை உருவாக்குவதே வெற்றிக்கான சாவியாகும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இம்முறை கடினமாக இருக்கும். ஏனெனில் அவர்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினார்கள். எனவே சரியான பிளேயிங் லெவனை உருவாக்குவது மிகவும் முக்கியம்" என்று கூறினார்.

Read Entire Article