கருணைமிக்க போப் ஆண்டவர்

4 weeks ago 6

உலகில் உள்ள 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் இந்த பூவுலக வாழ்க்கையை முடித்துக்கொண்டார். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையின் மறுநாள் இறந்ததாக ரோம் நகரின் வாடிகன் தேவாலயம் அறிவித்துள்ளது. ஈஸ்டர் அன்று அவர் மாடத்தில் இருந்து கூடியிருந்த மக்களிடையே தோன்றி ஆசி வழங்கினார். அடுத்து சில மணிகளுக்குள் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அவரை தன்வசம் இழுத்துக்கொண்டது. இதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அவர் இரட்டை நிமோனியாவுக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். போப் பிரான்சிசின் இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ. இவர் 266-வது போப் ஆவார். அவருக்கு முன்பு இருந்த போப் ஆண்டவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடந்த போப் ஆண்டவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

போப் ஆண்டவராக தேர்வு பெற்றவர்கள் புதிய பிறவி எடுத்ததற்கான அடையாளமாக அவர்களுடைய பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற பாரம்பரியத்தின்படி புனித பிரான்சிஸ் என்ற பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார். மரபுகளை தகர்த்து வாடிகனின் பார்வையை விசாலப்படுத்தியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. 8-வது நூற்றாண்டு முதல் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களே போப் ஆண்டவர்களாக தேர்வுப்பெற்று வந்த மரபை மாற்றி, முதல் லத்தீன் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் போப் ஆக தேர்வுபெற்றார். அவரது பெற்றோர் இத்தாலி நாட்டில் இருந்து அர்ஜென்டினா நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்கள். போப் பிரான்சிஸ் பல முதன் முதல்களை சாதித்து பெருமை பெற்றவர்.

முதல் இயேசு சபை பிரிவை சேர்ந்த போப் ஆவார். லத்தீன் அமெரிக்காவில் இருந்து வந்த முதல் போப், பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்தெடுத்த முதல் போப், முன்னாள் போப் உயிரோடு இருக்கும்போதே தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப், போப் ஆண்டவரின் அரண்மனையில் வசிக்காமல் சாதாரண குடியிருப்பில் வாழ்ந்த முதல் போப், ஈராக் முதல் கோஸ்டரிகா வரை குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்ற முதல் போப், உலகின் மிக உயர்ந்த முஸ்லிம் மத தலைவரான கிராண்ட் இமாம் அல்-தயீப்புடன் மனித சகோதரத்துவ பிரகடனத்தில் கையெழுத்திட்ட முதல் போப், வாடிகனில் பெண்களுக்கு பதவிகள் வழங்கிய போப், கார்டினல்களின் கவுன்சிலை நிறுவிய முதல் போப் என்று பல முதல்களுக்கு சொந்தக்காரரான போப் பிரான்சிஸ் ஏழைகள் மீதும், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் மீதும் மிக அன்பு கொண்டவராக இருந்தார்.

விவாகரத்து பெற்றவர்களுக்கும், மறுமணம் செய்தவர்களுக்கும் ஆதரவாக இருந்தார். மரண தண்டனைக்கு எதிராக இருந்தார். கொரோனா நேரத்தில் அவர் ஈராக் சென்றது உலகம் முழுவதும் பெரும் பேசும்பொருளாக இருந்தது. போர் என்பது எப்போதும் தோல்விதான் என்பதை உரக்க கூறினார். உலகில் பலருக்கு புனிதர் பட்டம் கொடுத்தவர், இந்தியாவில் 5 பேருக்கு கொடுத்திருக்கிறார். அதில், அன்னை தெரசாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. எளிமையின் பிறப்பிடமாக வாழ்ந்த அவர், மனிதன் இறப்பதற்காக அல்ல, வாழ்வதற்காகவே பிறந்து இருக்கிறான், எனவே வாழ்க்கை மதிப்புமிகுந்தது என்று ஈஸ்டர் நாளில் கடைசி செய்தியாக சொல்லி விட்டு மறைந்து இருக்கிறார். அவர் மறைந்தாலும் உலக மக்களின் நினைவில் என்றும் நிலைத்து இருப்பார்.

Read Entire Article