
சென்னை,
பிரபல இசையமைப்பாளரான சாம் சி.எஸ். 'ஓர் இரவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர், விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு இசையமைத்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி புகார் அளித்துள்ளார். "தமிழ் பையன் இந்தி பொண்ணு" என்ற படத்திற்கு இசையமைக்க ரூ.25 லட்சம் பெற்று ஏமாற்றியதாக குற்றம் சாட்டி கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படத்திற்கு இசை அமைப்பதற்காக இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.-க்கு ரூ.25 லட்சம் முன்பணம் கொடுத்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படத்தின் பணிகள் பாதியிலேயே நின்றது. தற்போது அப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஆனால் இப்படத்திற்கு இசை அமைக்காமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் சாம் சி.எஸ் ஏமாற்றி வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளர். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.