கருணை புரிவான் கந்தன்

2 months ago 7

திருப்பம் தரும் திருப்புகழ்! 18

‘கலியுகவரதன்’ என்றே முருகப் பெருமானைக் குறிப்பிடுகின்றன
ஆன்மிக நூல்கள்;
ஸ்கந்தஸ்ய கீர்த்தீம் அதுலாம்
கலிகல்மிஷ நாசினிம்
– என்பது வடமொழியாளர்களின் புகழ் பெற்ற வாசகம்.

தன்னை அர்ச்சிக்கும் அடியவர்களுக்கு ஆவன செய்து, அருள் வழங்கும் மூர்த்திகளின் கீர்த்தியை அனைவரும் அறிவோம். ஆனால் முருகனோ, வழிபடுபவருக்கு மட்டும் அல்லாமல், தன்னை எதிர்த்த சூரபத்மனையே சேவலும் மயிலுமாக மாற்றி, தன் சந்நிதானத்திலேயே இடம் பெறச் செய்த பரிபூரண தயாளகுணம் கொண்டவன். எதிரிக்கும் வாழ்வுதந்ததை ‘மறக்கருணை’ என்றே இலக்கணங்கள் குறிப்பிடுகின்றன.

“வானம் எங்கே! அமுதபானம் எங்கே! தேவர்
வாழ்க்கை அபிமானம் எங்கே
ஈசன் அங்கே செய்த தாருகனை,
ஆயிரம் இலக்கமுறு சிங்க முகனை
எண்ணிய திறல்கொண்ட சூரனை
மறக்கருணை ஈந்து பணி கொண்டிலை எனில்’’
– என திருவருட்பாவில் வள்ளற்பெருமான் பாடுகின்றார்.

பகைவர்களுக்கே கருணை காட்டி மன்னித்து பெருவாழ்வு தந்த முருகப் பெருமான், தன்னிடம் பக்தி செலுத்துபவர்களுக்கு எவ்விதம் கருணை புரிகிறார் என்பதையும் வள்ளலார் பாடுகின்றார்.

“நீருண்டு! பொழிகின்ற காருண்டு!
விலைகின்ற
திலன்உண்டு! பலனும் உண்டு!
நிதிஉண்டு! துதிஉண்டு! மதி உண்டு! கதி கொண்ட
நிலைஉண்டு! நெறியும் உண்டு!
ஊருண்டு! பேருண்டு! மணி உண்டு!
பணி உண்டு!
உடைஉண்டு! கொடையும் உண்டு!
உண்டு உண்டு மகிழவே உணவு
உண்டு!’’

இப்படி கருணைக் கடலாக விளங்கும் ஆறுமுகனின் திருவருளை உணர்ந்து திருச்செந்தூர் திருப்புகழில் ‘உயர் கருணை புரியும்’ என்றே பாடுகின்றார் அருணகிரிநாதர்.
“இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே!
உயர் கருணை புரியும் இன்பக்கடல் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத்
தருவாயே!’’

ஒழுக்க நெறியில் கட்டுப்படாத மனித மனம், ஆசைக் கடலில் துரும்பாக அகப்பட்டுத் தவிக்கிறது. இரவு பகல் என பாராது எப்போதும் சின்னச் சின்ன இன்பங்களிலேயே சிக்குண்டு தவிக்கின்ற மனமே! நீ செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

“இரவு பகல் பல காலும்
இயலிசை முத்தமிழ்கூறி
திரம் அதனைத் தெளிவாக
திருவருளைத் தருவாயே’’

கருணைபுரியும் கந்த சாமியைப் பக்தர் ஒருவர், மூன்று முறை நிலத்தில் தன் தேகம் முழுவதும் படுமாறு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தாராம். வயதான அந்தப் பெரியவர் முன்னே வடிவேலன் தோன்றி ‘என்னை ஒருமுறை வணங்கினாலே போதுமே! முதுமைக் காலத்தில் முடியாமல் ஏன் மூன்று முறை?

“முருகா என ஓர் தரம் ஓது அடியார்
முடிமேல் இணைதாள் அருள்வோனே!
நெஞ்சில் ஒரு கால் நினைக்கின்
இருகாலும் தோன்றும்’’

இவ்வாறு புலர்வர்கள் பாடியதை அறிந்தும், ஏன் தள்ளாத வயதில் மும்முறை நமஸ்காரம்? அதற்கு அந்த முதியவர் இப்படி பதில் அளித்தாராம். ‘முருகா! உன் அருட்பெருங்கருணை அடியேன் அறியாததா! போன பிறவியில் நான் தங்களை வணங்கவில்லை. அதனால்தான் இப்பிறவி வந்தது. அதற்கும் சேர்த்தே தற்போது வணங்கினேன்.

‘அப்படி என்றால் இருமுறை போதுமே! எதற்காக மும்முறை’ என்று முருகபிரான் முறு வலித்துக் கேட்டாராம்.‘இப்பிறவியில் அதை உணர்ந்துவிட்டேன், இப்போது வணங்கினேன். எனவே எனக்கு அடுத்த பிறவியை நீதரமாட்டாய். அதனால்தான் அதற்கும் சேர்த்து மும்முறை நமஸ்காரம் என்றாராம். இந்த முதியவரின் பக்தி நமக்கெல்லாம் வர வேண்டாமா!

“மயில் தகர் கல் இடையர் அந்த தினைகாவல்
வசை குறமகளை வந்திருந்து அணைவோனே
கயிலை மலை அனைய செந்திற் பதிவாழ்வே!
கரி முகவன் இளைய கந்தப் பெருமாளே!’’

தினைப் புனத்தில் குறவள்ளியை நாடிச் சென்ற முருகரே! கணபதியின் இளைய வரே! கயிலை மலை போன்று சிறந்த திருச்செந்தூர் தலம் உறைபவரே! என்றும் துதியோடு இத்திருப்புகழை நிறைவு செய்கிறார் அருணகிரிநாதர். அன்போடு உருகி அகம் குழைவார் இதயத்தில் நீங்காது இறைவன் உறைகின்றான் என்பதையே குறவள்ளியைத் தேடிச் சென்றது குளிர்கின்றது.

வள்ளியோடு வடிவேலனைச் சேர்த்து வைத்து வாழ்க்கை ஒப்பந்தம் நிகழ மூலகாரணம் ஆனவர், பிள்ளையார். எனவே ‘கரிமுகவன் இளைய கந்த!’ என பாடுகிறார்.
“அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமானே!’’

தொகுப்பு:  திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

The post கருணை புரிவான் கந்தன் appeared first on Dinakaran.

Read Entire Article