கயானாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: ஜார்ஜ்டவுன் நகரின் சாவி வழங்கி கவுரவிப்பு

1 month ago 5

ஜார்ஜ்டவுன்: மூன்று நாடுகள் பயணமாக கடந்த 16ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி முதல்கட்டமாக நைஜீரியாவுக்கும் அதைத் தொடர்ந்து பிரேசிலுக்கும் சென்றார். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து பயணத்தின் கடைசி கட்டமாக தென் அமெரிக்க நாடான கயானாவுக்கு நேற்று வந்தடைந்தார். கயானா அதிபர் இர்பான் அலியின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். மேலும், 56 ஆண்டுகளில் கயானாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.

இதனால், ஜார்ஜ்டவுன் விமான நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலி, பிரதமர் மார்க் அந்தோணி பிலிப்ஸ், 12க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் என ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இணைந்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து மோடி தங்கும் ஓட்டலுக்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். ஓட்டலில் கிரினிடா பிரதமர் டிக்கான் மிட்செல், பார்படோஸ் பிரதமர் மியா அமோர் மோட்லே ஆகியோரும் இணைந்து மோடியை வரவேற்றனர்.

இவர்களுடன் இந்திய வம்சாவளிகளும் பாரம்பரிய வழக்கப்படியும், சுலோகங்கள் பாடியும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். சுமார் 185 ஆண்டுகளுக்கு முன்பாகவே கயானாவுக்கு இந்தியர்கள் புலம்பெயர்ந்து அங்கு வாழ்ந்து வருகின்றனர். ஓட்டலில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், இந்தியா, கயானா நட்பின் அடையாளமாக ஜார்ஜ்டவுன் நகரின் சாவியை அந்நகரின் மேயர், பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். கயானாவில் 2 நாள் இப்பயணத்தில் பிரதமர் மோடி, கரீபியன் நாடுகளின் தலைவர்களை சந்திக்க உள்ளார்.

The post கயானாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: ஜார்ஜ்டவுன் நகரின் சாவி வழங்கி கவுரவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article