ஜார்ஜ் டவுன்,
பிரேசில் பயணத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி கயானா சென்றடைந்தார். ஜார்ஜ் டவுன் சென்றடைந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கயானா அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் அவரது மந்திரி அவையின் மூத்த உறுப்பினர்கள் வரவேற்றனர். பின்னர் அந்நாட்டு முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது.
கயானா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு அதிபர் இர்பான் அலியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
இதையடுத்து கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதனை தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.
56 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதல்முறை. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சிறிது நேரத்திற்கு முன்பு கயானாவில் தரையிறங்கினேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்த அதிபர் இர்பான் அலி, பிரதமர் மார்க அந்தோனி பிலிப்ஸ், மூத்த மந்திரிகள் மற்றும் பிற உயரதிகாரிகளுக்கு நன்றி. இந்த பயணம் நமது நாடுகளுக்கிடையேயான நட்பை ஆழப்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.