
பெங்களூரு,
நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடகத்தில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இதுபற்றி நடிகை சுதாராணி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர், 'நம்ம கர்நாடகா, கன்னட மொழி குறித்து யாரேனும் தவறாக பேசினால் அதை ஒப்புக்கொள்ள முடியாது. அந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து கண்டிக்க வேண்டும். கன்னட மொழி குறித்து ஆதாரம் இருந்தால் அதை காண்பித்து அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நம்ம நாடு, மொழி குறித்து இதுபோல் பேசுவது தவறு. இதற்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.