கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் கடும் மோதல் இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: நாளை முடிவுகள் வெளியாக வாய்ப்பு

2 weeks ago 4

வாஷிங்டன்: பெரும் எதிர்பார்ப்புகளுடன் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில் அடுத்த அதிபர் கமலா ஹாரிசா அல்லது டொனால்டு டிரம்பா என்பதை அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தேர்வு செய்ய உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்கள் களைகட்டின. இதில் கமலா, டிரம்ப் இருவருக்குமே ஆதரவுகள் குவிந்தன. இதனால், கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கான போட்டி காணப்படுகிறது. யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாத நிலையில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அமெரிக்காவில் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க மாட்டார்கள். தங்கள் மாகாண பிரதிநிதிகளுக்கு வாக்களித்து தேர்வு செய்வதன் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட், பிரதிநிதிகள் அவை என இரு அவைகள் உள்ளன. இதில் மேலவையான செனட்டில் 100 எம்பிக்களும், பிரதிநிதிகள் அவையில் 435 எம்பிக்களும் இருப்பார்கள். இதுதவிர, தலைநகர் வாஷிங்டனுக்கு தனியாக 3 எம்பிக்கள் இருப்பார்கள். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் தலா 2 செனட்கள் இருப்பார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அங்குள்ள மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதிகள் எண்ணிக்கை இருக்கும்.

இந்த 538 இடங்களும் எலக்ட்ரால் காலேஜ் ஓட்டுகள் என குறிப்பிடப்படும். இதில் 270க்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெறும் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 17ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் தங்களின் மாகாண தலைநகரில் கூடி அதிபரை தேர்ந்தெடுப்பார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய அதிபருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து 2025, ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்பார்.

பொதுவாக அதிபர் தேர்தலில் பென்சில்வேனியா, நிவாடா, வட கரோலினா, ஜார்ஜியா, அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களே வெற்றியை தீர்மானிப்பதாக உள்ளன. இதனால் உச்சகட்ட போட்டி நிலவும் இம்மாநிலங்களில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இறுதிகட்டமாக தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 18.65 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 7.7 கோடி பேர் ஏற்கனவே தபால் மூலமாகவும், நேரடியாகவும் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். தேர்தல் நடக்கும் இன்றைய நாளில் மக்கள் கட்டாயம் நேரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும்.

அமெரிக்க நேரப்படி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும். அங்கு மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாக்குப்பதிவு தொடங்கும் நேர சில மாகாணங்களில் வேறுபடும். இந்திய நேரப்படி பார்த்தால், இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி முதல் காலை 9.30 மணிக்குள் முடிவடையும். அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். இதில் கடும் போட்டி நிலவும் 7 மாகாணங்களில் முடிவுகள் வெளியாக அதிக நேரமாகலாம் என கூறப்படுகிறது.

அனைத்து மாகாணத்திலும் எந்த சிக்கலும் இன்றி முடிவுகள் விரைவாக வெளியாகும் பட்சத்தில் இந்திய நேரப்படி நாளை மாலைக்குள் புதிய அதிபர் யார் என்பது தெரிந்து விடும். கடந்த 2020 தேர்தலில் 4 நாட்களுக்குப் பிறகே முடிவுகள் வெளியாகின. அதுவே 2016ல் வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்தில் வெற்றி அறிவிக்கப்பட்டது. எனவே வாக்கு எண்ணிக்கையை பொறுத்தே முடிவுகள் வெளியாவது தெரியவரும்.

இந்த தேர்தல் முடிவை அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. இஸ்ரேல், காசா, உக்ரைன் போன்ற நாடுகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தி கொண்ட நாடாக அமெரிக்கா இருப்பதால் அதன் அதிபர் தேர்தல் முடிவை உலகமே எதிர்பார்த்துள்ளது.

* இன்று வாக்களிக்கிறார் டிரம்ப்
தேர்தல் நாளான இன்று டிரம்ப், புளோரிடாவில் பால்ம் பீச்சில் உள்ள தனது சொந்த எஸ்டேட்டில் ஓய்வெடுக்கவும், இரவு பார்ட்டி கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளார். எஸ்டேட் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் சென்றும் வாக்களிக்க உள்ளார். கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் இறுதிகட்ட இரவு பிரசாரத்தை முடித்துக் கொண்டு அங்கேயே தங்க உள்ளார். கமலா ஹாரிஸ் ஏற்கனவே கலிபோர்னியா செல்லும் முன்பாகவே தபால் மூலம் தனது வாக்கை செலுத்தவிட்டதாக கூறி உள்ளார்.

* வெள்ளை மாளிகை விட்டு வெளியேறியிருக்க கூடாது
பென்சில்வேனியாவில் தனது இறுதிகட்ட பிரசாரத்தில் பேசிய டிரம்ப், ‘‘2020 தேர்தலுக்குப் பிறகு நியாயமாக நான் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது. ஏனென்றால் அந்த தேர்தலில் மோசடி செய்து பைடனை வெற்றி பெறச் செய்தனர். இந்த முறை நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். நாங்கள் தோற்பதற்கு வாய்ப்பில்லை. அப்படி நாங்கள் தோற்றால் அதில் ஏதோ மோசடி நடந்திருக்கிறது என்றே அர்த்தம்’’ என்றார்.

ஏற்கனவே, கடந்த 2020ல் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே, இரவோடு இரவாக தான் வென்று விட்டதாக டிரம்ப் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதே போல இந்த முறையும் அவர் செய்யலாம. இதுதவிர, அதிபர் பைடனை பதவியேற்க விடாமல் தடுப்பதற்காக, அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள்ளேயே வன்முறையை தூண்டிவிட்டவர் டிரம்ப். இதனால் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தால், மீண்டும் அமெரிக்காவில் கலவரங்கள் நடக்கலாம் என அஞ்சப்படுகிறது.

* இந்திய பங்குச்சந்தை டிரம்பால் பாதிக்கும்
இந்திய பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகையில், ‘‘டிரம்ப் ஆட்சிக்கு வந்தால், உலகமயமாக்கல் கொள்கையில் கட்டுப்பாடுகள் விதிப்பதாக கூறி உள்ளார். அமெரிக்க தொழில் நிறுவனங்களை பாதுகாக்க, வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்க 10 முதல் 20 சதவீத வரியை உயர்த்தப் போவதாக கூறி உள்ளார். இதனால், டிரம்ப் வென்றால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கலாம். தங்கம் விலை மேலும் உயரும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரியும். அதுவே கமலா ஹாரிஸ் ஏற்கனவே தற்போது நடைமுறையில் உள்ள வரி விகிதங்களை தொடருவதாக கூறியிருப்பதால், இந்திய பங்குச்சந்தையில் எந்த பாதிப்பும் ஏற்படாது’’ என்றனர்.

* வங்காள மொழியில் நியூயார்க் வாக்குச்சீட்டு
நியூயார்க் நகரில் 200 மொழிகள் பேசும் மக்கள் வசிப்பதாக நகர திட்டமிடல் கமிஷன் கூறும் நிலையில், அந்நகரத்திற்கான வாக்குச்சீட்டில் ஆங்கிலம் தவிர 4 பிற மொழிகள் இடம் பெற்றுள்ளன. அதில் இந்திய மொழியில் வங்காளம் மட்டும் இடம் பெற்றுள்ளது. இதுதவிர, சைனீஸ், ஸ்பானிஷ், கொரியன் மொழிகளிலும் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

* கடைசி கட்ட கணிப்பில் முந்துகிறார் டிரம்ப்
ஏற்கனவே 7.7 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்து விட்ட நிலையில் இம்மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்ட கடைசி கட்ட கருத்துக்கணிப்புகளில் டிரம்ப் மிகக்குறைவான வாக்கு சதவீதத்தில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே வாக்களித்த 2,500 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவில் டிரம்ப் வடகரோலினா, அரிசோனா, நிவாடா மாகாணங்களில் முன்னிலை வகிக்கிறார். ஏற்கனவே டிரம்ப் 2 முறை வென்ற அயோவாவில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறார். இதனால் கடைசி கட்ட கணிப்புகளும் சரிசமமான போட்டி நிலவுவதை உறுதி செய்துள்ளன.

* பலத்த பாதுகாப்பு
ஏற்கனவே பிரசாரத்தின் போது, டிரம்பை கொல்ல 3 முறை சதி நடந்துள்ளது. இதில், முதல் முயற்சியின் போது, டிரம்பின் காதை துளைத்துக் கொண்டு தோட்டா சென்றது. இதனால் காதில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. 3 முறையும் உயிர் தப்பிய டிரம்பை தேர்தல் நாளில் படுகொலை செய்ய மீண்டும் முயற்சிகள் நடக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சீனா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலையீடுகளும் இருக்கலாம் என்பதால் அதிபர் தேர்தலுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* எதிரும்…புதிரும்
ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், 248 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் அதிபராகும் முதல் பெண் என்ற மகத்தான சாதனை படைக்கலாம். இதுமட்டுமின்றி முதல் இந்திய வம்சாவளி அதிபர், கறுப்பினத்தை சேர்ந்த முதல் பெண் அதிபர் என்கிற பல சாதனைகளையும் படைக்க கமலா ஹாரிஸ் காத்திருக்கிறார். மறுபுறம் இவரை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சியின் டெனால்டு டிரம்ப், அமெரிக்க வரலாற்றிலேயே குற்ற வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்ட முதல் முன்னாள் அதிபர்.

இவர் மீது 34 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் தொடர்ந்து விசாரணையை எதிர்கொண்டு வரும் டிரம்ப், மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் வெல்லும் பட்சத்தில், தோல்வியை சந்தித்து மீண்டும் அதிபர் பதவியை பிடித்த 2வது அமெரிக்கா அதிபர் என்ற பெருமையை பெறுவார். இப்படி எதிரும், புதிருமான பின்புலங்களை கொண்ட இருவருக்கு இடையேயான போட்டியாக அமெரிக்க அதிபர் தேர்தல் களம் அமைந்துள்ளது.

The post கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் கடும் மோதல் இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: நாளை முடிவுகள் வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article