கப்பலூர் டோல்கேட்டை கடந்து செல்ல இரு அரசு பஸ்களுக்கு அனுமதி மறுப்பு பாஸ்டேக்கில் பணம் இல்லாததால்: இரவு நேரத்தில் பயணிகள் அவதி

1 hour ago 4

திருமங்கலம், செப். 29: கப்பலூர் டோல்கேட்டில் பாஸ்டேக்கில் பணம் இல்லாத சிவகாசி மற்றும் நெல்லைஅரசுபஸ்களை டோல்கேட் ஊழியர்கள் இரவில் தடுத்து நிறுத்தினர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று திருமங்கலம் பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், சுங்க கட்டணத்திற்கு தேவையான பணம் இல்லையெனில் அரசு பஸ்களை சிறைபிடிப்பதை கப்பலூர் டோல்கேட் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதன்படி நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து சிவகாசி மற்றும் திருநெல்வேலிக்கு அரசு பஸ்கள் புறப்பட்டன.

கப்பலுரில் டோல்கேட் வந்தபோது அவற்றின் பாஸ்டேக்கில் பணம் இல்லை என ஸ்கேனரில் தெரியவரவே இரு பஸ்களையும் டோல்கேட் ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். பஸ்சில் பயணிகள் இருப்பதாக டிரைவர், கண்டக்டர்கள் கூறியும், ஊழியர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இரவு நேரத்தில் நீண்ட நேரம் அவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் டிரைவர், கண்டர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பாஸ்டேக் பணம் செலுத்தப்பட்டது. பின்னர் இரு பஸ்களும் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.

இந்த பணிகள் நடைபெறும் வரை சுமார் 45 நிமிடம் இரு அரசு பஸ்களிலும் இரவு நேரத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இரு தினங்களுக்கு முன் சிவகாசியிலிருந்து மதுரை வந்த அரசு பஸ்சை பாஸ்டேக் கட்டணம் இல்லாததால் டோல்கேட் ஊழியர்கள் 25 நிமிடங்கள் வரை நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் தினசரி நடைபெற துவங்கியுள்ளதால், பயணிகள், கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

The post கப்பலூர் டோல்கேட்டை கடந்து செல்ல இரு அரசு பஸ்களுக்கு அனுமதி மறுப்பு பாஸ்டேக்கில் பணம் இல்லாததால்: இரவு நேரத்தில் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article