கபில் தேவின் டெஸ்ட் விக்கெட் சாதனையை முறியடிப்பாரா பும்ரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

3 weeks ago 4

மெல்போர்ன்,

டெஸ்ட் போட்டிகளில் ஓராண்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் கபில் தேவ் முன்னணியில் உள்ளார். வேகப்பந்து வீச்சாளரான அவர் 1983-ம் ஆண்டில், 75 விக்கெட்டுகளை சாய்த்து இந்த சாதனையை படைத்துள்ளார். தவிரவும், 1979-ம் ஆண்டில், 74 விக்கெட்டுகள் சாய்த்து இருக்கிறார். அவருடைய சாதனை, வேறொரு இந்திய பந்து வீச்சாளரால் இன்னும் முறியடிக்கப்படாத ஒன்றாக உள்ளது.

ஓராண்டில் 70 விக்கெட்டுகளுக்கு கூடுதலாக எடுத்த இந்தியர்கள் வரிசையில் இரண்டு இந்திய பந்து வீச்சாளர்கள் உள்ளனர். 2004-ம் ஆண்டில் கும்பிளே (74 விக்கெட்டுகள்) மற்றும் 2016-ம் ஆண்டில் அஸ்வின் (72 விக்கெட்டுகள்) இந்த சாதனையை படைத்துள்ளனர். இருவரும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர்.

50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில், ஜாகீர் கான் ஒருவரே உள்ளார். 2002-ம் ஆண்டில் அவர் 51 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். இந்நிலையில், நடப்பு ஆண்டில் பும்ரா 62 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார். இதனால், கபில் தேவின் இந்த சாதனையை பும்ரா முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள பாக்சிங் டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை பும்ரா எடுத்து விட்டால், கபில் தேவின் சாதனையை முறியடிக்க கூடிய சூழல் உள்ளது. இதனை அவர் சாதிப்பாரா? என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதனுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-விக்கெட் சாதனையையும் அவர் எடுக்காமல் உள்ளார். இதனால், புதிய உச்சம் தொட வேண்டிய நிலையில் பும்ரா உள்ளார்.

உலக அளவில் பும்ராவின் ஸ்டிரைக் ரேட்டும் (29.3) சிறந்த வகையில் உள்ளது. அவருடைய சிறிய சறுக்கலும், 29.5 ஸ்டிரைக் ரேட் கொண்ட வாக்கர் யூனிஸ் (55 விக்கெட்டுகள்) முதல் இடத்திற்கு செல்ல இடமளித்திருக்கும்.

இதுதவிர, பந்து வீச்சு சராசரியிலும் உலக அளவில் 3-வது சிறந்த பந்து வீச்சாளராக பும்ரா உள்ளார். ஓராண்டில் 16 சராசரிக்கு கீழ், வேறெந்த இந்திய பந்து வீச்சாளரும் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை இதுவரை எடுத்ததில்லை. இம்ரான் கான் (1982-ம் ஆண்டில் 13.29 சராசரியுடன் 62 விக்கெட்டுகள்) மற்றும் சித் பர்னெஸ் (1912-ம் ஆண்டில் 14.14 சராசரியுடன் 61 விக்கெட்டுகள்) ஆகிய இருவருக்கு அடுத்து 3-வது இடத்தில் பும்ரா (14.58 சராசரி) உள்ளார்.

Read Entire Article