* டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’, ஆண்டுதோறும் திருக்குறள் மாணவர் மாநாடு உள்ளிட்ட 6 அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாகர்கோவில்: மக்களுக்கும், தமிழுக்கும் உழைப்பதுதான் என்னுடைய வாழ்நாள் கடமை என்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா வளைவுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நேற்றும், நேற்று முன்தினமும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல்நாளான நேற்று முன்தினம் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் சுகி சிவம் தலைமையில் நடந்த சிறப்பு பட்டிமன்றத்திலும் கலந்துகொண்டார்.
2ம் நாள் விழாவான நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் சிலை புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டார். மேலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டி, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகைகளை வழங்கினார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முக்கடல் சூழும் குமரி முனையில், முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலையினை போற்றக்கூடிய வெள்ளிவிழாவை திராவிட ஆட்சியில், நான் நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை அடைகிறேன், பூரிப்பு அடைகிறேன்.
வாழ்நாளில் என் சிறந்த நாளாக தமிழின் பெருமையை, குறளின் அருமையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் சிலையை திறந்து வைக்கின்ற பொத்தானை அழுத்தும்போது கலைஞர், தன்னுடைய உடல் நடுங்கியதாக சொன்னார். ஏனென்றால், அந்தளவுக்கு உணர்ச்சிப் பெருக்கத்தில் அவர் இருந்தார். வான்புகழ் வள்ளுவருக்கு வானுயரச் சிலை அமைக்கவேண்டும் என்பது, அவருடைய நெடுங்கனவு.
அந்தக் கனவு நனவான மகிழ்ச்சி, அவருக்கு அந்த உணர்வை தந்தது. இன்றைக்கு இந்தச் சிலையின் வெள்ளி விழாவை நடத்தும்போது, எனக்குள் இருக்கின்ற பெருமை இன்றைக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு, நமக்கு இப்படி ஒரு வரலாற்று வாய்ப்பைத் கலைஞர் உருவாக்கித் தந்துவிட்டுப் போயிருக்கிறார் என்ற எண்ணம்தான், இந்தப் பெருமைக்குக் காரணம். தமிழ்நாடு தொடங்குகின்ற இந்த குமரிமுனையில் வள்ளுவர் சிலையில் தொடங்கி, தலைவர் கலைஞர் செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழினத்துக்கும் உருவாக்கிக் கொடுத்த சொத்துகள்தான் இதெல்லாம். என்னைப் பொறுத்தவரையில், அவர் வழியில் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும் உழைப்பதுதான் என்னுடைய வாழ்நாள் கடமை. திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொன்னவுடன், அதற்கு பெரிய விழா நடத்தவேண்டும் என்று சொன்னேன். உடனே சில அதிமேதாவிகள், ஒரு சிலை அமைத்ததற்கு எதற்கு விழா நடத்தவேண்டும் என்று கேட்க தொடங்கினார்கள்.
அவர்கள் கேள்வியில் அர்த்தம் கிடையாது, ஆனால், உள்ளர்த்தம் உண்டு. அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. ஆனால், உங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, திருவள்ளுவர், தமிழர்களுக்கு இருக்கக்கூடிய உலக அடையாளம். திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம், அதனால் கொண்டாடுகிறோம், கொண்டாடுவோம். கொண்டாடிக் கொண்டே இருப்போம்.
தமிழ்நெறியின் அடையாளமாக, சுனாமியையும் எதிர்த்து உயர்ந்து நிற்கின்ற இந்த வள்ளுவர் சிலைதான், நம்முடைய அடையாளத்தின் பண்பாட்டுக் குறியீடு. திருக்குறளையும், திருவள்ளுவரையும் சொல்லிலும், செயலிலும், நெஞ்சிலும் தூக்கிச் சுமந்த இயக்கம் திராவிட இயக்கம். திருக்குறள் விழாவை முன்னிட்டு, சில அறிவிப்புகளையும் நான் வெளியிட விரும்புகிறேன்.
* திருவள்ளுவர் சிலையை சென்றடைவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். முதல் படகிற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரும், இரண்டாம் படகிற்கு மார்சல் நேசமணி பெயரும், மூன்றாம் படகிற்கு ஜி.யு.போப் பெயரும் சூட்டப்படும்.
* ‘திருக்குறள் திருப்பணிகள்’ தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டிற்கு மாவட்டம் ஒன்றிற்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
* ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும்.
* ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும்.
* தமிழ்த் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.
* திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுவது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு, ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். திருவள்ளுவர் வெறும் சிலையல்ல, திருக்குறள் வெறும் நூல் அல்ல, நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும். நம்மை மட்டுமல்ல, காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும். தனி மனிதர் முதல் அரசு வரைக்கும் நீதிநெறி சொன்னவர் நம்முடைய வள்ளுவர்.
வள்ளுவம் வாழ்வியல் நெறியாக மாறட்டும். சமுதாயம் குறள் சமுதாயமாக மலரட்டும். வாழ்க கலைஞரின் புகழ். வாழ்க குறளின் புகழ். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் தமிழர் பொங்கல் திருநாள் வாழ்த்தைச் சொல்லி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, இ.பெரியசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சாமிநாதன், ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தலைமை செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் கார்த்திகேயன், ராஜாராமன், செய்தித்துறை இயக்குநர் வைத்திநாதன், குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
* திருக்குறள் ஓலைச்சுவடிகள் அடங்கிய புகைப்பட கண்காட்சி
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா 2 ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. இதில் திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில் திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை முதல்வர் திறந்து வைத்து, பார்வையிட்டார். மேலும், இப்புகைப்படக் கண்காட்சியில் குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியது, சிலை உருவாக்கப்பட்ட நிகழ்வு, சிலையின் சிறப்பு, சிலை திறப்பு விழா ஆகியவை பற்றி விளக்கும் குறும்படத்தை பார்வையிட்டார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “அய்யன் திருவள்ளுவர் உருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் – 2025” முதல்வரால் நேற்று வெளியிடப்பட்டது. சிறப்புமலரை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொண்டார். இச்சிறப்பு மலரில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், வை.கணபதி ஸ்தபதி, கு.அழகர்சாமி, சாலமன் பாப்பையா, யுகபாரதி, ஆர்.பாலகிருஷ்ணன், படிக்கராமு, அருணன், வா.மு. சேதுராமன், நெல்லை ஜெயந்தா, பழனிபாரதி போன்ற பல்வேறு தமிழறிஞர்கள் எழுதிய கவிதைகள், திருக்குறள் வரலாற்றுக் குறிப்புகள், திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் இடம்பெற்றிருந்தது.
* ‘வள்ளுவ மாலை’
விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் வரிகளில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘வள்ளுவ மாலை’ என்ற பெயரில் சிறப்பு பாடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அந்த பாடல் விழா மேடையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை அனைவரும் பார்த்து, கேட்டு ரசித்தனர்.
* ‘திருவள்ளுவர் சாலை’
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னியாகுமரி கடற்கரை சாலைக்கு திருவள்ளுவர் சாலை என்று முதல்வர் பெயர் சூட்டினார்.
* கன்னியாகுமரி நகராட்சியாகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்திருப்பது மட்டுமில்லாமல் வள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றிருக்கின்ற, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில், கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்’ என்று அறிவித்தார்.
* வெள்ளி விழா நினைவு அலங்கார வளைவு
கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் அரசு விருந்தினர் மாளிகை அருகில் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா வளைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் 44 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட திருவள்ளுவர் போக்குவரத்து தீவுப் பூங்காவையும் அவர் திறந்து வைத்தார்.
The post கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா மக்களுக்கும் தமிழுக்கும் உழைப்பதே என்னுடைய வாழ்நாள் கடமை appeared first on Dinakaran.