
சென்னை,
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நாகர்கோவில் தொகுதி பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, " கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-
இன்று ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று சென்னையிலும், மதுரையிலும் இருக்கும் 2 பெண் நீதிபதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எப்படியும் படித்து முன்னேறி விடுவார்கள். அதனால் எந்த விதமான கவலையும் கிடையாது. எந்த இடத்தில் பார்த்தாலும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், படித்தவர்களாக வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
கன்னியாகுமரியிலும் ஒரு தனியார் சட்டக் கல்லூரி உள்ளது. ஆனால் அங்கு கட்டணம் அதிகம் என்று சொன்னீர்கள். நெல்லையில் அரசு சட்ட கல்லூரி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி வேண்டும் என்பது அரசின் கொள்கைதான். ஆனால் அது கொள்கை அளவில் இருக்கிறதே தவிர, நிதிநிலையின்படி அதை நிறைவேற்ற இயலாத சூழலில் இருக்கிறோம். நிதி நிலைமை சரியானால் நிச்சயமாக எல்லா மாவட்டங்களுக்கு சட்டக் கல்லூரி கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.