நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை கூண்டு பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்து மகா சமுத்திரம் என முக்கடல்களும் சங்கமிக்கின்ற சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும் சுவாமி விவேகானந்தர் நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ₹37 கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டது.
கடலில் தூண்கள் ஏதும் இல்லாமல் ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது இந்த கண்ணாடி பாலம். பாலத்தில் நடந்து செல்லும் பகுதியில் இருபுறமும் காங்கிரீட் பகுதிகளும் நடுவே கண்ணாடியால் ஆன பகுதியும் இடம் பெற்றுள்ளது. கண்ணாடியில் நடக்க விரும்பாதவர்கள் காங்கிரீட் பகுதியில் நடந்தவாறு கண்ணாடியில் கடலின் அலைகளை ரசித்து செல்லலாம். 53 மி.மீ தடிமனில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இது கடினப்படுத்தப்பட்ட கண்ணாடி ஆகும். தற்போது அதன் மீதுதான் சுற்றுலா பயணிகள் நடந்து செல்கின்றனர். கொளுத்தும் வெயிலிலும் இந்த கண்ணாடி சூடு ஆவது இல்லை. இதனால் வெயில் காலத்திலும், மழைக்காலத்திலும் இதன் மீது பாதுகாப்பாக நடந்து செல்ல முடியும். கடல்நடுவே அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் கண்ணாடி பாலம் இது ஆகும்.
இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறந்து வைத்தார். 3 நாட்கள் பலத்த சூறைக்காற்று காரணமாக படகு போக்குவரத்து நடைபெறவில்ைல. அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தளவாடங்களில் ஒரு பகுதி அகற்றப்படாமல் இருந்தது. ஒரு நாள் அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டு தளவாடங்கள் அகற்றும் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கடல் நடுவே அமையப்பெற்றுள்ள கண்ணாடி பாலத்தை பார்வையிடுவதிலும் அதில் நடந்து செல்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்ணாடி பாலத்தை பார்வையிடுவது குறிப்பிடத்தக்கது.
The post கன்னியாகுமரி கடல் நடுவே சுற்றுலா பயணிகளை கவர்ந்த கண்ணாடி இழை கூண்டு பாலம்: தினமும் 10 ஆயிரம் பேர் நடந்து செல்கின்றனர் appeared first on Dinakaran.