கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு

1 month ago 18

ஈரோடு: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வீரப்பன் கூட்டாளியை தலைமறைவு குற்றவாளியாக ஈரோடு கோர்ட் அறிவித்துள்ளது. கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு சொந்தமான பண்ணை வீடு ஈரோடு மாவட்டம், தாளவாடி தொட்டகாஜனூரில் உள்ளது. இந்த பண்ணை வீட்டிற்கு அவ்வப்போது நடிகர் ராஜ்குமார் வந்து தங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி இரவு பண்ணை வீட்டில் தங்கி இருந்த நடிகர் ராஜ்குமார் மற்றும் உறவினர்களான கோவிந்தராஜ், நாகப்பா, நாகேஷ் ஆகியோரை சந்தனமர கடத்தல் மன்னன் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் துப்பாக்கி முனையில் வனப்பகுதிக்குள் கடத்தி சென்றனர். பின்னர், இது தொடர்பாக தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரா கவுடா, சேதுமணி ஆகியோர்கடந்த 2004ம் ஆண்டு நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய 11 பேர் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டம், நொச்சிக்குப்பம், பாப்பாயம்மாள் வீதியை சேர்ந்த ரமேஷ் என்ற தமிழ் (33) என்பவர், கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கு ஈரோடு 3வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தமிழ் என்பவரின் முகவரிக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ரமேஷ் என்கிற தமிழை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து மாஜிஸ்திரேட் அப்சல்பாத்திமா உத்தரவிட்டுள்ளார். மேலும் அக்டோபர் 10ம் தேதி அவரை கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.

The post கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article