*மாவட்ட ஆட்சியர் தகவல்
சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் கனமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாசிமுத்தான் ஓடை, தில்லை காளியம்மன் ஓடை, தில்லைவிடங்கன் புயல் பாதுகாப்பு மையம், சிதம்பரம் வருவாய் கோட்டம், கிள்ளை பேரூராட்சி குச்சிப்பாளையம் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில், கீழ்மூங்கிலடி கிராமத்தில் உள்ள ராகவேந்திரா கல்லூரி அருகே அமைந்துள்ள பாசிமுத்தான் ஓடையில் மழைநீர் செல்வதையும், நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மற்றும் சிதம்பரம் பேருந்து நிலைய மேம்பாலம் அருகே பாசிமுத்தான் ஓடை மற்றும் முத்தையா நகரில் உள்ள பாசிமுத்தான் ஓடைகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடையில் உள்ள செடி கொடிகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
பைசல் மஹால் அருகே மழைநீர் செல்வதற்கு ஏதுவாக தில்லை காளியம்மன் ஓடையில் பொக்லைன் மூலம் தூர்வாரும் பணிகள், மேலும் அங்கு மழைநீர் வழிந்தோட ஓடையின் கரைகளில் இருந்த தேவையற்ற செடி கொடிகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மழைநீரில் அடித்து வரப்படும் செடி, கொடிகள் பாலத்தில் சிக்கிக்கொள்ளாதவாறு பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளாக நடைபெற்றுவரும் அனைத்து வடிகால் கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து துரிதமாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
தில்லைவிடங்கன் புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்களை தங்கவைக்க ஏதுவாக மின்சாரம், குடிநீர், ஜெனரேட்டர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், அனைத்து புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் பொதுமக்களுக்கு உணவு தயார் செய்ய அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கவும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தவும், பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் தயார் நிலையில் வைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீரால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு, பொதுமக்களிடையே குறைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
சிதம்பரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கிள்ளை பேரூராட்சி தாழ்வான பகுதியாகவும், மழைநீரால் பெரிதும் பாதிப்படையும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது. தொடர்ந்து, மழை பெய்யும் பட்சத்தில் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர், ஜெனரேட்டர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது, என்றார்.
ஆய்வின் போது, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் தாசில்தார் ஹேமானந்தி, சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் மல்லிகா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், பிரசன்னன், பார்த்திபன், நகராட்சி பொறியாளர் சுரேஷ் உள்பட வருவாய் துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
The post கனமழையை முன்னிட்டு ஆய்வு தயார் நிலையில் அத்தியாவசிய பொருட்கள் appeared first on Dinakaran.