கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 month ago 4

சென்னை: கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வடசென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி சென்றிட மழைநீரில் அடித்துவரப்படும் கழிவுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் பேசின் மேம்பாலத்தில் இருந்து, காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர், டிமெல்லோஸ் சாலையில் அதிகமாக மழைநீர் தேங்கும் இடங்களான கே.எம். கார்டன் மற்றும் புளியந்தோப்பு பகுதிகளில் சேரும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஸ்டீபன்சன் சாலையில் உள்ள மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகள் மூலம் பெரம்பூர் பிரதான சாலை பகுதிகளில் தேங்கும் மழைநீரை ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு சென்றடைவதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் பரந்தாமன், தாயகம் கவி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

* இன்று (16ம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாக துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சார துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசி பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, மெட்ரோ ரயில், ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.

* இன்று மிக அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிக குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சேலம் மாவட் டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது.

* சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பெரும் மழையால் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி வெளியிட்டுள்ளார்.

* மீட்பு பணியில் 89 படகுகள்…
வானிலை மைய அறிவிப்பின்படி, இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், வேலூர். திருப்பத்தூர். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம். திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

நாளை (17ம் தேதி) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 85 லட்சம் கைபேசிகளுக்கு முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 444 வீரர்களை கொண்ட 16 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையில் 10 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 89 மீட்பு படகுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

The post கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article