கனமழை எச்சரிக்கையால் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம்

1 month ago 7

சென்னை,

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் நாளை திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு ரெட் அலர்ட்டும், சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வேளச்சேரி பாலத்தில் முன்கூட்டியே பொதுமக்கள் தங்களது கார்களை நிறுத்தி இருந்தனர். கனமழை எச்சரிக்கையால் பாலத்தில் பொதுமக்கள் இடம்பிடித்து வரும் காணொளி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் வேளச்சேரி மேம்பாலத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களை திரும்ப எடுக்க காவல்துறை அறிவுறுத்தியும், காரின் உரிமையாளர்கள் கார்களை எடுக்க மறுத்து 'அபராதம் விதித்தாலும் பரவாயில்லை' என்று கூறி கார்களை எடுக்காமல் விட்டுச் செல்லும் சம்பவமும் நிகழ்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட கார்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மேம்பாலத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என காவல் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Read Entire Article