கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நடிகை: இந்திய வம்சாவளிக்கு வாய்ப்பு கிட்டுமா?

3 hours ago 1

புதுடெல்லி: கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நடிகை ரூபி தல்லாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்திய வம்சாவளியினர் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கனடாவில் மொத்தம் 18 லட்சம் இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், இது மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதமாகும். அந்நாட்டு அரசியலில் இந்தியர்களின் பங்கு அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் பதவியில் இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கனடாவின் 45வது பிரதமர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு அக்டோபர் 20ம் தேதி நடைபெறும். அதனால் கனடாவின் அடுத்த புதிய பிரதமர் என்பது குறித்த விவாதம் நடந்து வருகிறது. பலரது பெயர்கள் அடிபட்டாலும் கூட, முன்னாள் பாலிவுட் நடிகை ரூபி தல்லாவின் பெயரும், கனடாவின் பிரதமர் பதவிக்கான போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. நடிகை ரூபி தல்லா (50), லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஒருவேளை ரூபி தல்லா கனடா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடாவின் முதல் பெண் பிரதமராக ரூபி தல்லா இருப்பார். கடந்த 2004ம் ஆண்டு முதல் கனடா அரசியலில் தீவிரமாக இருந்து வரும் ரூபி தல்லா, அந்நாட்டின் லிபரல் கட்சியின் உறுப்பினர் ஆவார். கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்களில் ரூபியும் ஒருவராவார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரது பெற்றோர், கனடாவிற்கு குடிபெயர்ந்தனர். கடந்த 1974ம் ஆண்டில் கனடாவில் ரூபி தல்லா பிறந்தார். மருத்துவர், தொழிலதிபர், எம்பி, முன்னாள் நடிகை என்று பல தளங்களில் பணியாற்றி வருகிறார். பாலிவுட் இயக்குனர் வினோத் தல்வார் இயக்கிய திரைப்படத்தில் நடித்துள்ளார். மிஸ் இந்தியா கனடா அழகிப் போட்டியில் (1993) இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்தியாவின் புகழ்பெற்ற ராப்பர் ஹனி சிங்குடனும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நடிகை: இந்திய வம்சாவளிக்கு வாய்ப்பு கிட்டுமா? appeared first on Dinakaran.

Read Entire Article