சென்னை: பருவமழை காலம் வந்து விட்டாலே சென்னை மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்குவது என்பது எழுதப்படாத ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால், வெளுத்து வாங்கும் மழையால் சென்னையில் புதிதாக போடப்பட்ட சாலைகளும் குண்டும் குழியுமாக மாறும் நிலைமை இருந்து வருகிறது. வெள்ளநீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடும் போது தார்சாலைகள் பாதிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலைகளின் நிலமை மோசமாகி விடுகிறது. ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் இந்த பாதிப்பை சென்னைவாசிகள் சந்தித்தே ஆக வேண்டிய நிலைமை இருந்து வருகிறது.
தற்போது பெய்த பெஞ்சல் புயல் காரணமாக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் இடைவிடாத கனமழை பெய்தது. இதனால் தற்போது சென்னை சாலைகள் பல இடங்களில் கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது. நகரில் உள்ள பேருந்து சாலைகள், தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இது ஒருபுறம் என்றால் மறுபுறம், மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக தோண்டப்பட்ட சாலைகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பணிகளால் பல இடங்களில் தெருக்களின் வழியாக மாற்று பாதைகள் ஏற்படுத்தப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், சென்னையில் வாகனம் ஓட்டுவதெற்கென்றே தனியாக பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்பது பலரின் கிண்டலாக உள்ளது. அந்த அளவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அந்த இடங்களை கடந்து செல்லவே நீண்ட நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசல் என்பது எப்போதும் அதிகமாக காணப்படுகிறது.
சென்னை முழுக்கவே எங்கு பார்த்தாலும் பகல் நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து செல்லும். அதிலும் பீக் நேரங்களில் சொல்லவே தேவையில்லை. சாலைகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் வரிசையாக சீறி செல்வதை பார்க்கலாம். இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் பிசியாக காணப்படும் சென்னை சாலைகள் சேதமடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. சாலைகளில் சில இடங்களில் காணப்படும் திடீர் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் கவனிக்காமல் ஏற்றி இறக்கி செல்வதையும் பார்க்க முடியும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிலர் பள்ளங்களில் தவறி விழுந்து அடிபட்டுக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.
அதுவும் மழை நாட்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் எது பள்ளம் எது சாலை என்றே கண்டுபிடிக்க முடியாது. இப்படி குழப்பத்தில் பள்ளத்தில் விழுந்து பலி ஆகும் பொதுமக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் அதிகரித்து வருகிறது. எனவே இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இத்தகைய சூழலில்தான் சென்னையில் சேதம் அடைந்த சாலைகளை சீர் செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. சாலைகளை செப்பனிடும் பணிகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதால் பகல் நேரத்தில் இல்லாமல் இரவில் இந்த பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலைகள் மட்டுமல்ல, நடைபாதைகள் சேதமடைந்திருந்தாலும் அதையும் சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் சென்னையில் சேதமடைந்த சீர் செய்யும் நோக்கத்தொடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சேதமடைந்த சாலைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 5 ஆயிரம் சாலைகள் சேதமடைந்துள்ளதாக கண்டறிந்துள்ளோம். அவற்றை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. சில சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்தாலே போதும் என்ற நிலைமை உள்ளது. அந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பேட்ச் ஒர்க் செய்ய சூழல் இல்லாத சாலைகளில் புதிதாகவே சாலை அமைத்து வருகிறோம். மோசமாக சேதம் அடைந்த சாலைகளில் அடிப்பகுதிகளில் சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், நடைபாதை அடையாளங்களை சரி செய்வது, சாலைகளில் வேகத்தடை போடுவது உள்ளிட்ட பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. சென்னையில் சில இடங்களில் வேகத்தடைகள் அடையாளங்கள் மறைந்து போயிருப்பதால் வாகன ஓட்டிகள் கவனிக்காமல் வேகத் தடைகளில் ஏறி இறங்கும் நிலை உள்ளது. எனவே, வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் பூசுதல் போன்ற பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
* உட்புற சாலைகளையும் சீரமைக்க வேண்டும்
வாகன ஓட்டிகள் தரப்பில் கூறுகையில், ‘‘சென்னையில் பெய்த மழையினால் பல்வேறு இடங்களிலும் சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. தற்போது பழுதடைந்த சாலைகளை சீர் செய்யும் பணிகள் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி பயணிக்க முடியும். வாகனங்கள் பழுதடைவது, பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியம் ஆகியவை குறையும். பிரதான சாலைகள் மட்டும் இன்றி உட்புற சாலைகளிலும் சேதம் அடைந்த பகுதிகளை உடனடியாக சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட வேண்டும்’’ என்றனர்.
The post கன மழையால் சேதம் அடைந்த சாலைகள் முழுவீச்சில் சீரமைப்பு பணியை தொடங்கியது சென்னை மாநகராட்சி: பொதுமக்களுக்கு பாதிப்பின்றி இரவில் நடக்கிறது appeared first on Dinakaran.