கந்தசஷ்டி விழா; திருச்செந்தூர் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

2 months ago 14

திருச்செந்தூர்,

முருப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 4-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயநாதருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வைர வேல் வைத்தவாறு, வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார். பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவில் வளாகத்தில் திரளான விரதம் இருந்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கி விரதம் கடைபிடித்து வருகின்றனர்.

6-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடக்கிறது.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Read Entire Article