கதிராமங்கலம் திரவுபதி அம்மன்

1 week ago 2

பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரவுபதிக்கு தமிழ்நாட்டின் பல ஊர்களில் தனியாக ஆலயங்கள் இருக்கின்றன. திரவுபதியை தம் ஊர் காவல் தெய்வமாய் பல கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவ்வகையில் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் திரவுபதி அம்மன் எழுந்தருளியிருக்கிறார். அருள்மிகு தர்மராஜா திருக்கோவில் என்ற பெயர் கொண்ட இந்த ஆலயத்தில், திரவுபதியே கருவறை நாயகியாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

தர்மராஜாவுக்கு என்று கருவறையில் சிலை எதுவும் அமைக்கப்பட வில்லை. மாறாக, ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அர்த்த மண்டபத்தில் பஞ்சபாண்டவர்களின் உற்சவ சிலைகளும், திரவுபதியின் சிலையும் கண்கவர் வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.

 

ஆலய அமைப்பு

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் அழகான முன் மண்டபமும், அதைத் தொடர்ந்து மகா மண்டபமும் காட்சியளிக்கின்றன. அதற்கடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலின் இருபுறமும் துவார பாலகர்களின் திருமேனிகள் வீற்றிருக்கின்றன. இவை சுதை வடிவத் திருமேனிகள் ஆகும். அடுத்து கருவறையில் திரவுபதி அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் இன்முகம் மலர பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். ஆலயத்தின் உள்ளே நுழையும் முன் இடதுபுறம் அரவானின் சன்னிதி இருக்கிறது. திரவுபதி ஆலயங்களில் தவறாது அரவானின் சன்னிதி இடம்பெற்றிருக்கும்.

திருவிழாக்கள்

ஆடி மாதம் 15 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் மகாபாரதக் காட்சிகளாக நாடகம் நடைபெறுவதுடன், கடைசி மூன்று நாட்கள் துரியோதனன் படுகளம், தீ மிதித் திருவிழா, அம்பாள் வீதி உலா, மஞ்சள் நீராட்டு, தர்மராஜா பட்டாபிஷேகம் என திருவிழா அமர்க்களமாக நடந்தேறும். கடைசி நாள் விடையாற்றியுடன் விழா நிறைவு பெறும். திரவுபதியை வழிபடுவதால் தங்களது தாலி பாக்கியம் நிலைக்கும் என பெண்கள் நம்புகின்றனர்.

திருப்பனந்தாள் - மணல்மேடு பேருந்து தடத்தில் பந்தநல்லூர் என்ற ஊரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கதிராமங்கலம்.

Read Entire Article