கதம்பவனம்

1 week ago 5

கதம்பவந வாஸிநீ

நாம் இப்பொழுது பார்க்கப் போகும் நாமமானது, “கதம்பவந வாசினி’’ என்பதாகும். இதற்கு முன்னால் நாம் “மகா பத்மாடவீ சம்ஸ்தா’’. என்கிற நாமத்தை பார்த்தோம், இதற்கு முன்னால் நாம் பார்த்த நாமங்கள் அனைத்துமே அம்பாளினுடைய ஒவ்வொரு ஸ்தானங்களை குறித்து இருந்தது. எதிலிருந்து எனில் சுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா… என்று தொடங்கி ஸ்ரீ மந் நகர நாயிகா… சிந்தாமணி க்ருஹாங்கஸ்தா… இப்படி எல்லாம் தொடர்ந்து, நாம் பார்த்துக் கொண்டே வரும் பொழுது, அம்பாளினுடைய விசேஷமான ஸ்தானம் என்று சொல்லி மகா பத்மாடவீ சம்ஸ்தா என்கிற நாமத்தைப் பார்த்தோம். மேலும், அந்த நாமத்தினுடைய உட்பொருளையும் அதனுடைய தத்துவார்த்தத்தையும், தனிமனித ஜீவனை எப்படி அந்தர்முக யாத்திரையில் செலுத்திச் செயல்படுகின்றது என்பதையும் விரிவாகப் பார்த்தோம். எப்படி மகாபத்மாடவீ என்கிற நாமம் அம்பாளினுடைய விசேஷ ஸ்தானமோ, அதேபோன்று இன்னொரு விசேஷமான ஸ்தானம்தான் கதம்பவனம் என்பதாகும்.

மகா பத்மாடவீயை எப்படி பார்த்தோம் என்றால், சிந்தாமணி என்கிற அம்பாளினுடைய அரண்மனைக்கும் அதற்கு முன்னால் உள்ள சிருங்கார கோட்டை அதாவது மன்மதன் வசிக்கக்கூடிய சிங்காரக்கோட்டைக்கும் நடுவில் இருக்கக்கூடியதாக பார்த்தோம். இந்த விஷயங்கள் அனைத்தும் நாம் இதற்கு முந்தைய நாமாவில் பார்த்தோம்.
லலிதாம்பிகையான அம்பாள் பிந்து ஸ்தானத்தில் மகா திரிபுரசுந்தரி ஆக இருந்தாலும், அதை தவிர விசேஷ ஸ்தானங்களில் அம்பாள் தன்னுடைய இருப்பிடமாக கொண்டிருக்கிறாள் என்றும் பார்த்தோம். அதற்குத்தான் பல்வேறு நாம ரூபங்களில் பல்வேறு ஸ்தானங்களில் அம்பாள் இருப்பதை நாம் இதற்கு முன்னால் உள்ள நாமங்களைக் கொண்டு பார்த்தோம். சென்ற நாமத்தில், அம்பாள் மகா வாராஹியாக வீற்றிருக்கிறாள் என்றும் பார்த்தோம்.
நம்முடைய யோக ரூபமான அதாவது நம்முடைய சரீரத்தில் உள்ள யோகிகள் குறிப்பிடும் யோக ரூபமான விஷயங்களில் பிரம்மரந்திரத்தில் அம்பாள் வீற்றிருக்கிறாள் என்றும், நம்முடைய ஆக்ஞா சக்கரத்தில் யோக ரூபமாக, அந்தர்முகமாக வாராஹியாக வீற்றிருக்கிறாள்
என்றும் பார்த்தோம்.

இந்த நாமமான கதம்பவனம் என்பதும் அம்பாளினுடைய விசேஷ ஸ்தானம்தான். இதற்கு முன்பு சொல்லப்பட்ட மகா பத்மாடவீ என்கிற ஸ்தானம் எங்கு இருக்கிறது என்று பார்த்தோம். அதேபோல, ஸ்ரீ நகரத்தில் இந்த கதம்பவனம் எங்கு இருக்கிறது என்று பார்த்தால், நாம் இதற்கு முன்பு 25 கோட்டைகள் பார்த்தோம். அதில் முதலில் வரக்கூடியது உலோக கோட்டைகள் என்று பார்த்தோம். பிறகு 9 கோட்டைகள் ரத்தின மயமான கோட்டைகள் என்றும் பார்த்தோம். அப்படியே தொடர்ச்சியாக மனோமயக் கோட்டை அகங்காரக் கோட்டை, சூரிய, சந்திரன் மன்மதன் வசிக்கக்கூடிய சிருங்காரக்கோட்டை என்றெல்லாமும் பார்த்தோம். இப்போது அதில் கொஞ்சம் உலோகக் கோட்டை என்னவென்று பார்க்கலாம். இந்த உலோக கோட்டையில் இரும்பில் தொடங்கி, எஃகு பித்தளை என்றெல்லாமும் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டே வந்தோம். இதில் வெள்ளி கோட்டை தங்க கோட்டை இவை இரண்டுதான் இறுதியாக உள்ளவையாகும்.

இப்போது இந்த வெள்ளிக் கோட்டைக்கும் தங்கக் கோட்டைக்கும் நடுவில் இருக்கக்கூடிய பகுதிதான் “கதம்பவனம்’’ என்பதாகும். இந்த கதம்பவனம் என்பது அம்பாளுக்கு ஒரு விசேஷ ஸ்தானமாகும். அம்பாள் இங்கு மிகமிக விசேஷமாக எழுந்தருளி இருக்கிறாள். மீண்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும், இது ஸ்ரீ நகரத்தில் வெள்ளி கோட்டைக்கும் தங்க கோட்டைக்கும் மத்தியில் அமைந்துள்ள மிக விசேஷமான ஒரு ஸ்தானம். இந்த கதம்பவனத்தில் அம்பாள் எழுந்தருளி இருப்பதாலேயே அம்பாளுக்கு “கதம்பவன வாஸினி’’ என்கிற திருநாமம் ஏற்பட்டது. அம்பாள் வசிக்கக் கூடிய ஸ்தானத்திற்கு நீப வனம் என்றும் இன்னொரு திருநாமம் உண்டு. கதம்பம் மரம் என்பது ஒருவிதமான மரம். இந்த மரங்களால் நிறைந்திருக்கும் இந்த பகுதிக்கு கதம்பவனம் என்று பெயர். இந்த கதம்ப மரத்திற்கு நீப விருட்சம் என்று இன்னொரு பெயரும் உண்டு.

இங்கு ஒவ்வொரு கதம்ப மரமும் நெருக்கமாக ஒன்றோடு ஒன்று நெருங்கி அடர்ந்து பரவி இருப்பதால், மிகப்பெரிய கதம்பவனமாக இது தோற்றமளிக்கிறது. இந்த கதம்ப மரம் என்பது இயற்கையிலேயே பார்ப்பதற்கு மிக அழகானது. மிகவும் மென்மையானது. நல்ல மணமுள்ள வாசனைகள் கொடுக்கக்கூடிய மலர்களை உடையது. இப்படிப்பட்ட மிக உயர்ந்த விருட்சமே, கதம்ப விருட்சமாகும். இந்த கதம்ப விருட்சங்கள் நெருங்கி நெருங்கி வளர்ந்திருக்கக்கூடிய ஒரு
இயற்கையான சூழ்நிலையாகும். இப்போது இந்த காட்சியை அப்படியே மனதிற்குள் கொண்டு வருவோம். இப்போது வெளிப் பிரபஞ்சத்தை பாருங்கள். வெளியே எத்தனையோ உயிரினங்கள் வசிக்கின்றன. அதிலும் உயிருள்ள பொருட்கள் உயிரற்ற பொருட்கள் இருக்கின்றன. எத்தனையோ செயற்கையான பொருட்கள் இருக்கின்றன.

ஆனாலும், இதையெல்லாம் தாண்டி இந்தப் பிரபஞ்சத்தை பார்க்கும்போதே… அதாவது வெளியிலுள்ள பிரபஞ்சத்தை பார்க்கும்போதே அதில் இறைவனின் சொரூபமான தரிசனம் கிடைக்க வேண்டு மெனில், அதற்காக மகான்கள் ஒரு வழியை நமக்கு காட்டிக் கொடுக்கிறார்கள். மீண்டும் புரிந்து கொள்வோம். இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமான வஸ்துவை நம்முள் நாமே உள்முகமாக பயணப்பட்டு அந்தர்முகமாக பார்க்கும் ஒரு வழியையும் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், வெளி முகத்தில் நாம் நம் சாதாரண கண்கொண்டு பார்க்கும்போதும், even though you are looking externally, you can see the truth. புரிகின்றதா… அப்போது அந்த சத்திய வஸ்துவை அந்த truth ஐ எப்போது நம்மால் பார்க்க முடிகின்றது என்று மகான்கள் காட்டிக் கொடுக்கிறார்கள் எனில், see the nature என்று காண்பித்துக் கொடுக்கிறார்கள். இயற்கையை பாருங்கள் என்று காட்டிக் கொடுக்கிறார்கள்.

இப்போது நாம் இங்கு அந்தர்முகமாக பார்வையை செலுத்துங்கள் என்றெல்லாம் கூறவில்லை. பார்வையை உள்முகமாக திருப்புங்கள் என்றெல்லாமும் சொல்லவில்லை. வெறுமே வெளியே தெரியும் பிரபஞ்சத்தை, கடலை, வானத்தை, சூரியனை, சந்திரனை, அருவியை, மலையை… மரங்களை, காட்டை, விலங்குகளை இன்னும் என்னென்னவெல்லாம் உள்ளதை அவை அனைத்தையும் சும்மா பாருங்கள் என்கிறார்கள் மகான்கள். ஏனெனில், அதையெல்லாம் நீங்களா உருவாக்கினீர்கள். இல்லையே… அந்த பிரபஞ்சத்தின் ஆதார சக்தியேதான் இப்படி எல்லாமுமாக மாறியிருக்கிறது என்று இயற்கையை பாருங்கள் என்கிறார்கள். எனவே, இந்த பார்க்கின்ற இந்த பிரமாண்டமான இயற்கையான அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது.

நாம் சிறு புல்லை எடுத்துக் கொண்டால்கூட சரி, காட்டிலுள்ள பிரமாண்டமான மரமாகட்டும், மழையாகட்டும் எல்லாமுமே அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்படி இந்த இயற்கையை நாம் வெளியே பார்த்துக் கொண்டிருக்கும்போது, நம்மை அறியாமல் நம்மை அந்தர்முகமாக… உள்முகமாக கொண்டு செல்லும். நம்மையும் அறியாமலேயே நம்மை அந்தர்முகத்திற்கு கொண்டுபோய் அந்த சத்தியத்தை காண்பிக்கும். அதனால்தான் ஏன் தபோவனம் என்று வைத்திருக்கிறார்கள். ஏன், எல்லா இடங்களிலுமே ஞானானுபவம் சித்திக்குமே… எதற்காக புராணங்கள் உட்பட எல்லா தலங்களையும் ஆரண்யம் என்று சொல்லி அதற்குள் சென்று ரிஷிகளெல்லாம் தவமியற்ற வேண்டும். (சுழலும்)

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

 

The post கதம்பவனம் appeared first on Dinakaran.

Read Entire Article