கண்துடைப்பாக நடத்தப்படும் இலையின் கள ஆய்வு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 months ago 8

‘‘அதிகார புல்லட்சாமி பற்றி அரசியல் புல்லட்சாமிகிட்ட புகார்கள் கொடுக்க போறாங்களாமே தெரியுமா…’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘குட்டி பிரான்ஸ் என்றழைக்கப்படும் புதுச்சேரியில் அரசியல் புல்லட்சாமிக்கு போட்டியாக அதிகார புல்லட்சாமி உருவாகி சமீபகாலமாக பரபரப்பை ஏற்படுத்தி வர்றாராம்.. அதாவது வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட நகர பகுதிக்குள் அதிக விலை கொண்ட தனது புல்லட்டில் அதிக சப்தத்துடன் உலா வருவதோடு மட்டுமின்றி பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ செல்வதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறாங்களாம்.. சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே… சொல்லப்போனால் அதை முதலில் கடைபிடிக்க வேண்டியவர்களே அரசு பணி பொறுப்புகளில் உள்ளவர்கள் தான். ஆனால் அவர்களே சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு இப்படி உலா வரலாமான்னு உள்ளூர் மக்களே கொந்தளிக்கிறாங்களாம்.. சர்ச்சை இப்படியிருக்க, இப்போ அந்த அதிகாரியோ, தனது துறையின் நவீன உடற்பயிற்சி கூடத்தையும் குறிப்பிட்ட மணி நேரங்களில் ஆக்கிரமித்து தடாலடி காட்டுகிறாராம்.. தனது துணையுடன் சென்று அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவதால், மற்றவர்களுக்கு அந்நேரத்தில் விடாபிடியாக அனுமதி மறுக்கப்படுகிறதுன்னு புலம்பித் தவிக்கிறார்களாம் அத்துறையின் கீழ்மட்டத் தரப்பு. தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில்தான் உடற்பயிற்சி செய்ய முடியும், அந்த நேரத்தையும் இப்படி ஆக்கிரமித்து விட்டால் என்ன செய்வது, உயர் அதிகாரிகளும் கண்டுக்காம இருக்கிறாங்கன்னு புலம்பல் சத்தம் மேலோங்கி இருக்கிறதாம்.. இதுதொடர்பா அரசியல் புல்லட்சாமியிடம் முறையிட கீழ்மட்டம் தயாராகி வருவதுதான் புதுச்சேரியின் தற்போதைய ஹைலைட்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடலோர மாவட்டத்தில் கண்துடைப்பிற்காகவே கள ஆய்வு நடத்தப்பட்டதாக இலைக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி சார்பில் மாவட்டம் தோறும் களஆய்வு நடத்தப்படும் என சேலத்துக்காரர் அறிவித்தார். இந்த கள ஆய்விற்காக நியமிக்கப்பட்ட மாஜி அமைச்சர்கள் கொண்ட குழுவினர், மாவட்டம்தோறும் ஆய்வுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி கடலோர மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய மாஜி அமைச்சர்கள் கொண்ட குழுவினர் வந்திருந்தார்களாம்… லோக்கல் மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் மணியானவர் தலைமையில் கள ஆய்வு நடந்தது. இதில், கலந்துகொண்ட முதல் கட்ட, 2வது கட்ட நிர்வாகிகளிடமும் எந்தவிதமான குறைகள் கேட்காமல் இரண்டு மாஜி அமைச்சர்களும் வழக்கம் போல் கட்சி பொதுகூட்டத்தில் பேசுவது போல் பேசிவிட்டு கண்துடைப்பிற்காக கள ஆய்வை நடத்தி விட்டு அப்படியே சென்றனர். இது லோக்கலில் உள்ள கட்சியினர் இடையே சலசலப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கஞ்சா செடி வளர்த்து, காக்கியிடம் சிக்கிய பலே பாட்டி பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல நாட் என்று தொடங்கி பள்ளியில முடியுற பேர் ஊராட்சி இருக்குது.. இங்க இருக்குற ஒரு வீட்டுல ஒரு பாட்டி செடி ஒண்ணு வளர்த்து வந்திருக்காங்க.. செடி வளர்க்குறது நல்ல விஷயம் தான் ஆனா, அந்த பாட்டி வளர்த்தது கஞ்சா செடியாம்.. இது காக்கிகள் காதுக்கு போயிருக்குது, உடனே காக்கிகள் ரெய்டுக்கு போயிருக்காங்க.. அந்த பாட்டி வீட்டுல இருந்து 2 கஞ்சா செடியையும் பறிமுதல் செஞ்சிருக்காங்க.. அந்த பாட்டியையும் காக்கிகள் கைது செஞ்சி சிறையில அடைச்சுட்டாங்க.. மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல, காக்கிகள் வாகனங்கள் சோதனை நடத்தியும், மாவட்ட எல்லைகள்ல சோதனை நடத்தியும் கஞ்சா, குட்கா என்று பறிமுதல் செய்து உள்ளார்களாம்.. இதுபோக, இப்ப வீடுகள்ல கஞ்சா செடி வளர்த்து வர்றாங்களான்னு, காக்கிகள் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிட்டாங்களாம்.. பாட்டி வளர்த்த கஞ்சா செடி மேட்டர் தான் மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பரபரப்பாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வார விடுமுறையில் கண்டக்டருக்கு மெமோ கொடுத்து சிக்கலில் மாட்டிக்கிட்டாராமே செக்கிங் இன்ஸ்பெக்டர் தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் வார விடுமுறை அன்று பணியாற்றிய செக்கிங் இன்ஸ்பெக்டர் ஒருவர், சரியான வழித்தடத்தில் செல்ல வில்லை என கூறி கண்டக்டர் ஒருத்தருக்கு மெமோ கொடுத்த விவகாரம் பெரும் சிக்கல் ஆகி இருக்கிறதாம்.. இந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் வார விடுமுறை அன்று பணிக்கு வர எந்தவித அனுமதியும் வாங்க வில்லையாம்.. அன்றைய தினம் அவர் சீருடையிலும் இல்லையாம்.. வார விடுமுறைக்கு முதல் நாள் பணி முடிந்து போகும்போது, மெமோ புத்தகத்தை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு போய் இருக்கணும்.. ஆனால் இவரு மெமோ புத்தகத்தை வீட்டுக்கே கொண்டு போய் இருக்காரு.. மறுநாள் விடுமுறையில் சாதாரண உடையில் வந்து உட்கார்ந்து சம்பந்தப்பட்ட அந்த கண்டக்டரை மட்டும் குறி வைச்சு மெமோ கொடுத்துட்டு போய் இருக்காரு.. இவரு பஸ் நிலையத்தில் சாதாரண உடையில் உட்கார்ந்து மெமோ எழுதியதை வீடியோ எடுத்து இப்போது தொழிலாளர்கள் வைரலாக்கி வருகிறார்களாம்.. வார விடுமுறை அன்று இவரு ஏன் பணிக்கு வந்தார், பணிக்கு வந்தவர் ஏன் சீருடை அணிய வில்லைன்னு கேள்வி மேல் கேள்வி கேட்கும் தொழிலாளர்கள், இவரு மெமோ கொடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட பஸ்சின் வழித்தட பயண பட்டியலையும் ஆய்வு செய்ய வில்லை என்பதையும் குறிப்பிட்டு இவரு மேல் நடவடிக்கை எடுக்கணும்னு கூறி போராட்டத்துக்கு தயாராகி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post கண்துடைப்பாக நடத்தப்படும் இலையின் கள ஆய்வு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article