சென்னை: தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கணித்தமிழ்த் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். கணினித் தமிழை மாணவர்கள், ஆர்வலர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்று \\”கணித்தமிழ் 24\\” மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒருங்கிணைப்பில், மாதந்தோறும் கணித்தமிழ்த் தொடர்பான புதிய தொடர் சொற்பொழிவுகளை நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியுடன் இணைந்து நேற்று மாணவர்களுக்கு கணினித் தமிழ் விழிப்புணர்வினை ஏற்படுத்திட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் கணித்தமிழ் தொடர் சொற்பொழிவின் முதல் நிகழ்ச்சியினை நடத்தியது. இதில் கணித்தமிழ் காலாண்டு மின்-இதழை அமைச்சர் வெளியிட்டார். இந்த மின்-இதழில் தமிழ் இணையக் கல்விக்கழகச் செயல்பாடுகள், கணித்தமிழில் எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இது போன்ற கணித்தமிழ் தொடர் சொற்பொழிவுகளை மாதந்தோறும் நடத்த தமிழ் இணையக் கல்விக்கழகம் திட்டமிட்டுள்ளது. இத்தொடர் சொற்பொழிவில் தமிழ்த் துறை, கணினித் துறை மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கு பெற்றுப் பயன்பெறலாம். தமிழ் அறிந்த மாணவர்கள் மொழித் தொழில்நுட்பங்களைக் கற்றறிந்து மொழித் தொழில்நுட்ப வல்லுநராகவும், கணினித் துறை சார்ந்த மாணவர்கள் மொழியின் கட்டமைப்பினை உணர்ந்துகொண்டு மொழிப் பொறியாளராகவும் மாறுவதற்கான முன்னெடுப்பினை இந்த தொடர் சொற்பொழிவு நிகழ்வுகள் மூலம் தமிழ் இணையக் கல்விக்கழகம் எடுத்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், மொழியையும் பண்பாட்டையும் பிரிக்க இயலாது. பண்பாட்டிற்கேற்றவாறே ஒரு மொழியில் சொற்கள் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவில் தமிழ் செழித்தோங்க பல்வேறு முன்னெடுப்புகள் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்புச் சொற்பொழிவை பாடலாசிரியர் மதன் கார்க்கி ’செயற்கை நுண்ணறிவும் கலைகளும்’ என்னும் தலைப்பில் வழங்கினார்.
எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலைவர் முரளிதரன் வாழ்த்துரை வழங்கினார். எத்திராஜ் மகளிர் கல்லூரி, எம்.ஓ.பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி, காயிதேமில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, லயோலா கல்லூரி, மகளிர் கிறித்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து தமிழ் இலக்கியம், கணினி அறிவியல் துறைகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இதில் பங்கேற்றனர்.
The post கணித்தமிழ்த் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.