காலாப்பட்டு, பிப். 7: காலாப்பட்டு பழக்கடை பெண் வியாபாரியின் 15 பவுன் தாலி செயினை பறித்தது தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி விஜயகுமாரி (57). இவர் காலாப்பட்டு இசிஆர்- மாத்தூர் ரோடு சந்திப்பில் பழக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 31ம் தேதி இரவு, பழக்கடையை மூடிவிட்டு தனது கணவருடன் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இசிஆர் ரோட்டில் பேக்கரி அருகே நின்றிருந்த மர்ம நபர் விஜயகுமாரி சென்ற பைக்கை பின்தொடர்ந்து சென்று, அவர் அணிந்திருந்த 15 பவுன் தங்கச்சங்கிலியை பின்புறமாக இழுத்து அறுத்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து விஜயகுமாரி, காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர். இதில், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது, பெரிய காலப்பட்டு இசிஆர் ரோட்டில் பாஸ்ட் புட் கடை நடத்தி வரும் சூர்யா (எ) முருகன் (28) மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான முருகன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறியதாவது: விஜயகுமாரியை காலை முதல் பின்தொடர்ந்தேன். இரவு வியாபாரம் முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது தாலி செயினை அறுத்துக்கொண்டு தீயணைப்பு நிலையம் உள்ள சாலை வழியாக சென்று, மீண்டும் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்து எதுவும் தெரியாதது போல் நின்றிருந்தேன். செயின் அறுப்பு செய்தி, காலாப்பட்டு முழுவதும் பரவியது. அங்கு வந்த போலீசார் என்னிடமும் விசாரித்தனர்.
எனக்கு எதுவும் தெரியாது என்றேன். இதையடுத்து நான் கடன் வாங்கியிருந்த காலாப்பட்டு செல்லியம்மன் நகரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உதவியுடன் திருடிய தாலி செயினை புதுச்சேரியில் உள்ள நகைக்கடையில் விற்றேன். அந்த பணத்தை ஏற்கனவே கடன் பெற்று இருந்தவர்களுக்கு கொடுத்து, மீதி பணத்துடன் ஒகேனக்கல் சுற்றுலா சென்று, அங்கு உல்லாசமாக இருந்து ஊர் திரும்பினோம். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். வாக்குமூலத்தின் அடிப்படையில் திருட்டு நகையை விற்க உதவிய ராமமூர்த்தியையும் இன்ஸ்பெக்டர் தனசேகர், எஸ்ஐ குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செயின் பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், 70 கிராம் தங்க கட்டி, ₹40 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முருகன், ராமமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
The post கணவருடன் பைக்கில் சென்றபோது பழக்கடை பெண் வியாபாரியின் 15 பவுன் தாலி செயின் பறித்த 4 பேர் கைது: உல்லாசமாக சுற்றித்திரிந்ததாக வாக்குமூலம் appeared first on Dinakaran.