கணவன் மீது நடவடிக்கை கோரி 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

4 weeks ago 5

*கலெக்டர் ஆபிசில் பரபரப்பு

சேலம் : சேலத்தில் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஆபிசில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி.

இவரது மகள் சவுந்தர்யா (30), நேற்று தனது 2 குழந்தைகள் மற்றும் தாயாருடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். போர்டிகோவிற்கு சென்ற அவர், திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து, 2 குழந்தைகள் மற்றும் தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

இதுகுறித்து சவுந்தர்யா கூறுகையில், ‘கடந்த 2018ம் ஆண்டு, சேலம் மாநகராட்சி டேங்க் ஆப்ரேட்டருக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. அப்போது சீர்வரிசையாக நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கினோம். ஆனால், எனது கணவர், அவரின் அக்காவுடன் சேர்ந்து கொண்டு, மேலும் நகை, பணம் வாங்கி வர வேண்டும் என தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார்.

இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், அவ்வப்போது அம்மா வீட்டுக்கு வந்துவிடுவேன். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்த பிரச்னை காரணமாக, தற்போது அண்ணா நகரில் உள்ளேன். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கணவன் மீது நடவடிக்கை கோரி 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண் appeared first on Dinakaran.

Read Entire Article