புதுக்கோட்டை,ஜன.22: கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி தர்மராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தொழிலாளர்களின் நிலை குறித்தும் தொழிற்சங்க அமைப்பு குறித்தும் நலவாரிய செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றினார். மாநில துணைத்தலைவரும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் எதிர்கால கடமைகள் குறித்தும் அமைப்புநிலை குறித்தும் உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ராஜா நடந்துள்ள வேலைகள் குறித்து அறிக்கை வைத்து பேசினார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கட்டுமான பொருட்கள் எம்சாண்ட் பிசான்ட் சிமென்ட் கம்பி, செங்கல் ஜல்லி உள்ளிட்ட பொருள்கள் விலை உயர்ந்து கட்டுமான தொழிலை பாதிக்கின்ற நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளிக்கு வழங்கி வரும் ஓய்வூதியம் 1200 ரூபாய் என்பதை உயர்த்தி 6000 வழங்க வேண்டும். பெண் கட்டுமான தொழிலாளிகளுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கேட்பு மனுக்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து உதவித்தொகைகளை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு வழங்கும் திட்டத்தை எளிமைப்படுத்தி வீடுற்ற கட்டுமான தொழிலாளி அனைவருக்கும் வீடுகள் வழங்கிட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.