கட்டுமான பணியை முடிக்காத காரணத்தால்...நாள் ஒன்றிற்கு ரூ.2,000 அபராதம் விதிப்பு - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

19 hours ago 1

சென்னை,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி 126வது வார்டு ஆண்டிமான்ய தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.118.53 கோடி மதிப்பீட்டில் 702 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி (பி) லிமிடெட், முன் புனையப்பட்ட கான்கிரீட் தொழில்நுட்பத்துடன் ஏ,பி,சி,டி என 4 தொகுப்புகளாக ஒப்பந்தம் போடப்பட்டு 18 மாத ஒப்பந்த காலமாக 23.8.2024 அன்று திட்டப்பகுதியை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

7 மாத காலத்தில் 45 % கட்டுமான பணி நிறைவடைந்து இருக்க வேண்டும். தற்போது வரை 15 % மட்டுமே பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.இதனால் குடியிருப்புதாரர்கள் காலிசெய்து 2 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் குறித்த நேரத்தில் வீடு வழங்க முடியாத நிலையில் உள்ளது.

உரிய காலத்திற்குள் கட்டுமான பணியை முடிக்காத காரணத்தால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநரால் கட்டண அபராதமாக நாள் ஒன்றிற்கு ரூ.2000 விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த காலத்தில் கட்டுமான பணியை எட்டும் வரை இந்த அபராத கட்டணம் தொடரும். பி.ஆர்.என் கார்டன் திட்டப்பகுதியில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் 503 அடுக்குமாடி குடியிருப்புகள் தூண் மற்றும் 9 தளங்களுடன் தங்கள் நிறுவனத்திடம் 18.12.2024 அன்று திட்டப்பகுதி ஒப்படைக்கப்பட்டது. தற்போது 20% பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் 11% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.

இந்த தாமதம், உரிய நேரத்தில் நிறைவடையாமைக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஒப்பந்தக் காலக்கட்டத்தை மீறி தாமதம் செய்ததற்காக ஒப்பந்ததாரருக்கு அறிவிப்பு கடிதம் அனுப்பி உள்ளது. உங்கள் நிறுவனத்தினால் ஏற்கனவே ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தாமதம் தொடர்ந்தால் ஒப்பந்த விதிமுறைகளின் படி கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article