பிரயாக்ராஜ்: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. கடந்த மாதம் இவரது வீட்டின் உள்ளே பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உள் விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் நீதிபதி வர்மாவை அலகாபாத் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா நேற்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண்பன்சாலி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், வழக்கறிஞர்களுக்கு தெரியாமல் பதவி பிரமாண நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விக்ரந்த் பாண்டே,‘‘நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவியேற்பு குறித்து உயர் நீதிமன்றத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. எங்களுக்கு தெரியாமல் நீதிபதி வர்மாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த விதத்தை கண்டிக்கிறோம்” என்றார்.
* நீதித்துறை பணிகள் ஒதுக்கப்படாது
நீதிபதி வர்மாவுக்கு எதிராக விசாரணை நடந்து வருவதால் தற்போது அவருக்கு நீதிமன்ற பணிகள் எதுவும் ஒதுக்கப்படமாட்டாது.கடந்த வாரம், நீதிபதி வர்மாவுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மூன்று பேர் கொண்ட குழு இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு எப்ஐஆர் பதிவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
The post கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் நீதிபதியாக பதவியேற்பு: வழக்கறிஞர்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.