கட்டியாம்பந்தல் கிராமத்தில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு: உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

4 weeks ago 5

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, கட்டியாம்பந்தல் கிராமத்தில் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் அங்கு உயர் மட்ட மேம்பலாம் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். உத்திரமேரூர் அருகே, கட்டியாம்பந்தல் கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமமக்கள் கட்டியாம்பந்தல் கிராமத்தில் இருந்து, வெள்ளபுத்தூர் கிராமம் வழியாக புழுதிவாக்கம், வையாவூர், படாளம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும், இதேபோல், கட்டியாம்பந்தல் கிராமத்தில் இருந்து பாப்பநல்லூர் கிராமம் வழியாக வேடந்தாங்கல், வேடவாக்கம், சூரை, கருங்குழி, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் என இரண்டு பிரதான சாலைகள் உள்ளன.

இந்த இரண்டு சாலைகளளையும் கிராமமக்கள் வேலைக்கு சென்று வரவும், பள்ளி கல்லூரிக்கு சென்று வரவும் மற்றும் மருத்துவமனைக்கு செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலைகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலங்கள் கட்டப்பட்டன. தற்போது, இந்த தரை பாலங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. மேலும், தரைப்பாலம் வழியாக செல்லும் கால்வாய்களும் தூர்ந்துபோய், செடி-கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையால் இந்த தரைப்பாலங்கள் நீரில் மூழ்கி, போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விடுகிறது. இதனால், கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் இது தொடர் கதையாகி வருகிறது.

மேலும், கால்வாய்களில் செல்லும் மழைநீரானது அருகே உள்ள விவசாய நிலங்களிலும் பாய்வதால் விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கால்நடைகள் வளர்ப்பவர்களும், நோயாளிகளும் பள்ளி-கல்லூரி மாணவ மாணவர்களும் போக்குவரத்து துண்டிப்பால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இந்த தரைப்பாலத்தினை அகற்றிவிட்டு அதனை மேம்பாலமாக மாற்றி தரவும், மேலும், கால்வாய்களை முறையாக தூர்வாரி சீரமைத்து தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கட்டியாம்பந்தல் கிராமத்தில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு: உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article