*விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்
ரெட்டிச்சாவடி : விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி 2 வருடங்களுக்கு முன் ரூ.6,431 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு, தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
விழுப்புரம், ஜானகிபுரம் பகுதியில் இருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள், புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்கள் வழியாக செல்கிறது.
இந்த நான்கு வழி சாலைக்காக பல்வேறு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. மேலும் பல்வேறு இணைப்பு சாலைகளை இணைக்கும் விதமாகவும் சிறிய மற்றும் பெரிய பாலங்களும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த சாலையின் அருகில் செல்லக்கூடிய வடிகால் வாய்க்கால்கள், சாலை பணிக்காக பல்வேறு இடங்களில் மூடப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் வழக்கமாக செல்லக்கூடிய வடிகால் வாய்க்கால் மூடப்பட்டதால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து விவசாய நிலமும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
உரிய திட்டமிடாமல் இந்த சாலை அமைக்கப்பட்டதால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேசிய நெடுஞ்சாலையில், பாகூர் அருகே செல்லக்கூடிய வடிகால் வாய்க்கால் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் வடிகால் வாய்க்காலை சீரமைப்பதற்காக கட்டிய சுவர், கட்டிய வேகத்தில் சரிந்துள்ளது. இதனால் வடிகால் வாய்க்காலில் இருந்து நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் வடிகால் வாய்க்கால் முழுவதும் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. மேலும் பல்வேறு வடிகால் வாய்க்கால் சேதம் அடைந்ததால் மழைநீர் மற்றும் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
மழை காலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மீண்டும் நிலங்கள் மற்றும் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள், பொதுமக்கள் கூறுகின்றனர். வடிகால் வாய்க்காலை முறையாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கட்டிய வேகத்தில் சரிந்த வடிகால் வாய்க்கால் மழை காலத்தில் கிராமங்களை வெள்ளம் சூழும் அபாயம் appeared first on Dinakaran.