கட்சி தாவியதாக போஸ்டர் ஒட்டிய விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை போன கதையை சொல்கிறார் wiki யானந்தா

3 months ago 11

‘‘சமூக வலைதளங்களில் இன்னொரு கட்சிக்கு தாவிட்டதா போஸ்டர் பதிவு போட்ட விவகாரத்தில் இலைபார்ட்டி பஞ்சாயத்து காக்கிகள் நிலையம் வரைக்கும் போயிருக்குதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பிரியாணி ஊர் தொகுதியில மா என்று தொடங்குற வெஸ்ட் ஒன்றியம் இலைபார்ட்டி இருக்குது.. இந்த இலை பார்ட்டியில கோஷ்டி பிரச்னை பெருசா வெடிச்சிருக்குதாம்.. இலை பார்ட்டியில அக்ரி அணியில திருப்பதி சாமி பெயர் கொண்டவரை பழிவாங்கிட்டாங்களாம்.. அவருக்கு எதிராக அந்த பார்ட்டியிலயே 2 குரூப் இருக்குதாம்.. இதுல ஒரு குரூப் கொஞ்ச நாளுக்கு முன்னாடி, சாமி பெயரை கொண்ட நிர்வாகி இலை பார்ட்டியில இருந்து இன்னொரு கட்சிக்கு போயிட்டாருன்னு சமூகவலைதளங்களில் போஸ்டர் பதிவு செஞ்சி இருக்காங்களாம்.. இதை பார்த்து அதிர்ச்சியான நிர்வாகி, நான் எப்பப்பா கட்சி மாறினேன்.. இப்படி கூடவாடா செய்வீங்கன்னு, புலம்பி தீர்த்துட்டாராம்.. அதே புலம்பலோட, காக்கிகள் நிலையத்துக்கும் புகார் சொல்லியிருக்காரு.. பார்ட்டி தலைமைக்கும் புகாரை அனுப்பி வெச்சிருக்காராம்.. கட்சி மாறிட்டாருன்னு சமூகவலைதளங்கள்ல அடிச்ச போஸ்டரு, இலை பார்ட்டியில பரபரப்பை ஏற்படுத்தியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நடிகரின் ஆக்ரோஷத்தால கூட்டணி ஒத்து வருமா, வராதா என்கிற புதுகுழப்பத்தில் இருக்கிறாராமே புல்லட்சாமி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘விக்கிரவாண்டி மாநாடு நல்ல ஷூட்டிங் என அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்திருக்கு.. ஆனால் புதுச்சேரியின் புல்லட்சாமியோ கூலாக வீட்டில் இருந்தபடி மாநாடு நிகழ்வுகளை டிவியில் கண்டுகளித்து முகமலர்ச்சியோடு இருந்தாராம்.. ஒன்றிய தரப்பு கட்சியுடனான கூட்டணியில் சமீபகாலமாக விரிசல் உள்ள நிலையில், நடிகர் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணமும் புல்லட்சாமிக்கு வந்திருப்பதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்களாம்.. இந்தநிலையில் அக்கட்சியின் ெபாதுச்செயலாளரான ஆனந்தமிக்கவர், ஒருகாலத்தில் புல்லட்சாமியின் தீவிர விசுவாசியாக இருந்ததால் கூட்டணிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பேச்சு அடிபடுகிறதாம்.. மேலும் ஒன்றிய தரப்பு கட்சி குறித்து மாநாட்டில் விமர்சித்து பேசியதோடு, தனது கொள்கையுடன் ஒத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி, அதிகாரத்தில் பங்கு என்ற நடிகரின் ஆக்ரோஷம்தான் புல்லட்சாமிக்கு இடிக்கிறதாம்.. இதனால் கூட்டணி ஒத்துவருமா, வராதா என்ற புதுகுழப்பத்திலும் இருக்கிறாராம் புல்லட்சாமி..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதிக உறுப்பினர்களை சேர்த்து நல்ல பெயர் எடுக்கலாம் என அடிபொடிகளுக்கு உத்தரவிட்ட மலராத கட்சியின் பொறுப்பானவர் சுற்றியுள்ளவர்களிடம் ஒரே புலம்பல்தானாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘லிங்க சாமி பெயருடன் துவங்கும் மாவட்டத்தில் மலராத கட்சியின் முன்னாள் தேசிய முக்கிய நிர்வாகியான மன்னரானவருக்கு மாநில அளவில் திடீர் பொறுப்பு வழங்கப்பட்டது. படிப்பிற்காக மாநில தலைவர் வெளிநாடு சென்றதால் இந்த பொறுப்பு அவருக்கு கிடைச்சிருக்கு.. கட்சியில் எந்த பதவியும் வழங்காமல் கடந்த சில ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இந்த திடீர் பொறுப்பு வழங்கப்பட்டதையடுத்து இந்த பொறுப்பிலாவது ஏதாவது செய்து தலைமையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என நினைத்தாராம்.. இதற்கு கட்சி உறுப்பினர் சேர்க்கை பணியை பயன்படுத்தி, அதிக உறுப்பினர்களை தாமரை கட்சியில் சேர்க்க வேண்டுமென தன் அடிபொடிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் சொந்த மாவட்டத்திலேயே உறுப்பினர் சேர்க்கை பிசுபிசுத்து விட்டதாம்.. மாவட்டத்தில் உள்ள எந்த ஊரிலும் உறுப்பினர் சேர்க்கை உருப்படியாக இல்லையாம்.. பல இடங்களில் ஏற்கனவே இருப்பவர்களையே உறுப்பினராக சேர்த்த காமெடியும் நடந்திருக்கு.. முன்பெல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு மிஸ்டு கால் கொடுத்தாலே உறுப்பினராக சேர்ந்து விட்டார்கள் என அட்ராசிட்டி செய்தோம். இப்ப அதுவும் இல்லை… நாம கடைசி வரை இப்படித்தான் காலத்தை ஓட்டணும் போல என சுற்றியுள்ளவர்களிடம் ஒரே புலம்பல்ஸ்தானாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாய் பகை, குட்டி உறவா என்ற கதையா நிழலானவரு இலைக்கட்சி தலைவருக்கு துரோகம் செய்றதா தொண்டர்கள் பேசிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி தலைவரு கூவத்தூரில் எப்படியெல்லாம் கீரிடம் சூட்டினார் என்பது ஊரறிந்த விஷயம்.. அப்போது நடந்த கூத்தை விவரிக்கும்போது பதவிக்காக இவ்வளவு மோசமான காரியங்கள் நடந்ததா என்பதை நினைத்தாலே பொது ஜனத்துக்கு அருவருப்பா இருக்கு.. இந்தநிலையில் இலைக்கட்சி தலைவருக்கு நெருக்கமாக இருந்த நிர்வாகி ஒருவர், கூவத்தூர் விவகாரத்தை புட்டு புட்டு வச்சதோடு மட்டுமல்லாமல், பால் பண்ணை தலைவராக இருந்த இலைக்கட்சி தலைவர் நெய், பாலை அபேஸ் செஞ்சது எனக்கு தெரியுமுன்னு ஒரு குண்டை உருட்டி விட்டாருங்க.. இதனால கொதித்துபோன இலைக்கட்சி தலைவர் அந்த மூன்றெழுத்து நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கி கல்தா கொடுத்திட்டாரு… ஆனால் அவரோடு இன்னும் மிகவும் நெருங்கிய உறவில் இருப்பவரு நிழலானவருன்னு இலைக்கட்சிக்காரங்க அடிச்சி சொல்றாங்க.. அதுக்கு ஒரு காரணத்தையும் சொல்றாங்க.. பஞ்சாயத்து தலைவர் பதவியை பல லட்சங்களை தண்ணீராக இறைச்சி, சிரிப்பு நடிகர் பெயரை கொண்ட நிர்வாகி ஒருவர் பிடித்திருந்தாராம்… அவரை கவுக்கும் வகையில் மூன்றெழுத்து கல்தா நிர்வாகி, புதிய கோஷ்டியிடம் பல லட்சங்களை கறந்திருக்காரு.. இதெல்லாம் நிழலானவரு ஆசியோட நடந்ததா கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதனை தெரிஞ்சிக்கிட்ட பஞ்சாயத்து தலைவரோ எனது பதவியை பறிக்க இவர்கள் யாருன்னு, அவரே ராஜினாமா செஞ்சிட்டாராம். இதனால வாங்கின பணத்தை ரிட்டன் கொடுக்க முடியாத நிலை கல்தா நிர்வாகிக்கு ஏற்பட்டு போச்சாம்.. இதனால நிழலானவருகிட்ட நியாயம் கேட்டிருக்காரு… பதில் சொல்லமுடியாம தவிச்ச நிழல் அதிரடியா ஒரு உத்தரவாதம் கொடுத்தாராம்.. கட்சியில இருந்து தான் எதுவும் செய்யனுமுன்னு ஒண்ணுமில்ல.. நம்ம ஆட்சிக்கு வந்ததும் நீ நினைக்கும் காரியத்தை செய்து கொடுக்கிறேன். அதுவரை அமைதியாக இருன்னு சத்தியம் செஞ்சாராம்.. இதற்கு மருந்துகடைக்காரர் சாட்சியாம்.. இதனால இந்த கல்தா நிர்வாகி.. நான் இலைக்கட்சியில்தான் இருக்கேன்னு தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லிக்கிட்டு வர்றாராம்.. அதே நேரத்துல தாய் பகை, குட்டி உறவு என்ற கதையா தனக்கு விஸ்வாசமாக இருப்பாருன்னு நினைச்சிக்கிட்டிருக்கும் இலைக்கட்சி தலைவருக்கு நிழலானவரு துரோகம் செஞ்சிக்கிட்டு இருப்பதாக தொண்டர்கள் புலம்புறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

‘‘வேறென்ன விவகாரம் இருக்கு..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நடிகர் விஜய் நடத்திய மாநாட்டுக்கு லாட்டரி அதிபர் ஒருவரும், அதிமுக ஆட்சிக்காலத்தில் முட்டை, சத்துணவு பொருட்கள் வழங்கியதில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட புட்ஸ் என்று முடியும் ஈரோட்டு நிறுவனமும் தலா 10 சி வழங்கினார்களாம். அதோடு அன்புமணிக்கு மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று வசனம் எழுதிக் கொடுத்து அவரை முதல்வராக முயன்றவரும், கமலஹாசனை முதல்வராக திட்டம் வகுத்துக் கொடுத்தவருமான ஒருவர்தான் தற்போது விஜய்க்கும் வியூக வகுப்பாளராக உள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா. n

The post கட்சி தாவியதாக போஸ்டர் ஒட்டிய விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை போன கதையை சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article